அம்மாக்கள்.. ஆசிரியைகள்..


அம்மாக்கள்.. ஆசிரியைகள்..
x
தினத்தந்தி 19 March 2017 12:48 PM IST (Updated: 19 March 2017 12:47 PM IST)
t-max-icont-min-icon

இந்திய தாய்மார்கள் படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ந்திய தாய்மார்கள் படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் மட்டும் நன்றாக படித்தால் போதாது, தங்கள் பகுதியில் உள்ள எல்லா குழந்தைகளும் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக அசாம் மாநில அம்மாக்கள் எடுக்கும் முயற்சி பாராட்டிற்குரியது. அங்கு கோலகாட் மாவட்டத்தில், கூடங்க் கிராமத்தை சேர்ந்த தாய்மார்கள் ஒருங்கிணைந்து ‘அம்மாக்கள் கூட்டமைப்பு’ ஒன்றை தொடங்கியிருக்கிறார்கள். அந்த அமைப்பை சேர்ந்தவர்கள், பள்ளியில் இருந்து தங்கள் பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள் என்பதை பார்ப்பதோடு, தங்கள் கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் யாராவது பள்ளிக்கு வராமல் இருக்கிறார்களா? என்றும் விசாரிக்கிறார்கள். அப்படி யாராவது வராமல் இருந்தால் உடனே சென்று அந்த மாணவர்களை அழைத்து வந்து விடுகிறார்கள். படிப்பின் சிறப்பை பெற்றோருக்கு எடுத்துச்சொல்கிறார்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வற்புறுத்துகிறார்கள். தங்களுக்கு தெரிந்ததை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்களது தனித்திறமைகளை வளர்க்கவும் துணைபுரிகிறார்கள்.

அந்த கூட்டமைப்பில் இருக்கும் அம்மாக்களில் ஒருவரான தீபா சொல்கிறார்: “எங்கள் கிராமத்தை சேர்ந்த பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆர்வமின்றி தெருக்களில் ஒன்று கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். பெற்றோர் கண்டித்து பள்ளிக்கு அனுப்பி வைத்தாலும், சில மணி நேரங்களிலேயே பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்து விடுவார்கள். அதற்கான காரணத்தை அறிய பள்ளிக்கு சென்று விசாரித்த போது, ஆசிரியர்கள் சரிவர பள்ளிக்கு வராதது தெரிய வந்தது.

இப்படிப்பட்ட பல்வேறு பிரச்சினைகளால் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் எங்கள் கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஒன்றுகூடி கூட்டமைப்பை தொடங்கியிருக்கிறோம். அதன் மூலம், கிராம மக்கள் அனைவரும் கண்டிப்பாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவு போட்டோம். தினமும் பள்ளிக்கு சென்று குழந்தைகளின் வருகை பதிவேட்டை சரிபார்த்து, அன்று பள்ளிக்கு வராத குழந்தைகளின் வீட்டிற்கு சென்று, காரணத்தை விசாரிப்போம். உடல்நலக்குறைவு உள்ளிட்ட தகுந்த காரணமின்றி விளையாட்டு போக்கான மனநிலையில் இருக்கும் குழந்தைகளிடமும், அவர்களுடைய பெற்றோரிடமும் கல்வியின் அவசியத்தை விளக்கிக் கூறி பள்ளிக்கு அழைத்து வருவோம். ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தால் எங்கள் கூட்டமைப்பில் இருக்கும் நன்றாக படித்திருக்கும் பெண்களை குழந்தைகளுக்கு பாடம் நடத்த வைப்போம்” என்றார்.

இந்த கூட்டமைப்பில் இருக்கும் பெண்கள், பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு தயாரிப்பது, பாத்திரங்களை கழுவுவது, பள்ளி தோட்டத்தை பராமரிப்பது, வளாகத்தை தூய்மைப்படுத்துவது போன்ற பணிகளையும் செய் கிறார்கள். ‘குழந்தைகள் கிளப்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி குழந்தைகளுக்கு விவசாய பணி, நெசவு பயிற்சி, கை வினைப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி போன்றவைகளையும் வழங்குகிறார்கள். சனிக்கிழமை தோறும் பாரம்பரிய நடன போட்டி, பாட்டுப் போட்டி, நீதி கதைகள் கூறுதல் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார்கள். இதனால் படிப்பில் ஆர்வம் இல்லாமல் பள்ளிக்கு செல்ல தயங்கிய குழந்தைகளும் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்கள் என்று இந்த கூட்டமைப்பு அம்மாக்கள் பெருமிதம் கொள்கிறார்கள். 

Next Story