மனதுக்கு மருந்து : சறுக்கி விழுந்திடும் உறவு இது உடனே சரிசெய்திடு...


மனதுக்கு மருந்து : சறுக்கி விழுந்திடும் உறவு இது உடனே சரிசெய்திடு...
x
தினத்தந்தி 19 March 2017 3:57 PM IST (Updated: 19 March 2017 3:56 PM IST)
t-max-icont-min-icon

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவன். கல்லூரியில் எனக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள்.

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவன். கல்லூரியில் எனக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள். அவர்களோடு பழகுகிறேன். அப்போது எனக்கு பாலியல் சார்ந்த எண்ணங்களே வருவதில்லை. ஆனால் 45 வயதுகளில் இருக்கும் கம்பீரமான பெண்களைப் பார்த்தால் என் மனதுக்குள் அலை அலையாய் ஆசை எழுகிறது. மனது கட்டவிழ்ந்து போய்விடுகிறது. இதை என் நண்பனிடம் சொன்னபோது ‘உனக்கு ஆன்டி மேல்தான் ஆசை வருகிறது’ என்று கிண்டல் செய்தான். அந்த வயது பெண்கள் மீது என் கவனம் திரும்பாமல் இருக்க வழி சொல்லுங்கள்?   (சேலம் வாசகர்)


பாலியல் ஆசைகள் துளிர்த்து, வளர்ந்து, மேம்பட்ட நிலையில் இருக்கும்  பருவத்தில் நின்று கொண்டிருக் கிறீர்கள். நீங்கள் 20 வயது பெண்களிடம் பழகுகிறீர்கள். அதை இயல்பாக உங்கள் மனது ஏற்றுக்கொண்டுவிட்டது. அதனால் பிரச்சினை இல்லாமல் அவர்களுடனான நட்பை உங்களால் தொடர முடிகிறது. ஆனால் 45 வயது கம்பீரமான பெண்களை உங்களால் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கு காரணம் உங்கள் மனது... எண்ணங்கள்...!

15 வயதை கடக்கும் பருவத்தில் நீங்கள் படித்த கதைகளில், பார்த்த சினிமாக்களில், நேரடியான சந்திப்புக்களில், கேள்விப்பட்ட வி‌ஷயங்களில் அனைத்திலுமே 45 வயது கம்பீரமான பெண்கள் உங்களுக்குள் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்த தாக்கம் அவர்களைப் பற்றிய ஒரு ‘எண்ணத்தை’ ஏற்படுத்தி ஈர்ப்பாக மாறி, அந்த பருவ பெண்களைப்பற்றியே உங்களை சிந்திக்க வைத்திருக்கிறது. அதில் தெளிவினை ஏற்படுத்தி முறைப்படுத்தும் பக்குவம் உங்களுக்கு இல்லாததால் அது அவர்கள் மீதான ‘‘பாலியல் பார்வையாக’’ மாறி இருக்கிறது. போதா குறைக்கு உங்கள் நண்பர்களிடம் வேறு அதைப்பற்றி பேசியிருக்கிறீர்கள். அவர்களும் ‘ஆன்டி மீதுதான் உனக்கு ஆசை வருகிறது’ என்று சொன்னதால், அந்த குழம்பிய குட்டை எண்ணத்துக்குள்ளே நீங்கள் மூழ்கி கிடக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதில் இருந்து மீள்வது எளிது. மீள இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று– அப்படிப்பட்ட ஒரு பெண் உங்கள் எதிரில் வரும்போது ‘எனக்கு ஆன்டிகளையே பிடிக்காது’ என்று நினைக்கவேண்டும். மனதையும் அந்த நேரம் திசை திருப்பி வேறு வி‌ஷயத்தில் செலுத்தவேண்டும். (ஆன்டிகளை பிடிக்கும் என்று நினைத்ததற்கு பதிலாக பிடிக்காது என்று நினைக்க சொல்கிறேன்). இரண்டு– அந்த பெண்களின் உடலை மட்டும் பார்க்காமல் அவர்களது தோற்றத்தில் இருக்கும் சிறப்பு, அவர்களது பணி, வளர்ச்சி, பேச்சு, செயல், திறமை, சமூக அந்தஸ்து, பக்குவம் இவைகளை எல்லாம் கலந்து பாருங்கள். அப்போது பாலியல் ஈர்ப்பு எண்ணம் வருவதற்கு பதில் ஒரு பிரமிப்பு வரும். அவர்கள் மீது உங்களுக்கு மரியாதை ஏற்பட்டு விடும். அப்போது அவர்களிடமும் நீங்கள் நட்போடு பேசலாம்!   

எனக்கு 19 வயதாகிறது. கல்லூரியில் என்னுடன் படிக்கும் மாணவனும், நானும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருகிறோம். இந்த நிலையில் அவன் திடீரென்று ‘என்னை மறந்துவிடு. என்னால் உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது’ என்கிறான். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது. அவனைப் பழிவாங்க வேண்டும். என் இறப்புக்கு அவன் தான் காரணம் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளலாம் என்று தோன்று கிறது. நான் என்ன செய்வது?  (வேலூர் வாசகி)


உங்கள் முடிவு சிறுபிள்ளைத்தனமானது. நீங்கள் நினைப்பதுபோல் வாழ்க்கை நெறிமுறைகளும் இல்லை. சட்ட நெறி முறைகளும் இல்லை. ஒருவர் தற்கொலை செய்வதே பெருந்தவறு. அதுவும் இன்னொருவரை பழிவாங்க நீங்கள் உங்கள் உயிரை பலிகொடுப்பது மிகவும் கோழைத் தனமானது. தற்கொலைக்கான காரணத்தை வெளிப்படுத்தும் கடிதத்தில் ஒரு நபரின் பெயரை குறிப்பிடுவதால் அவருக்கு தண்டனை கிடைத்துவிடும் என்று உறுதியாக சொல்லிவிடமுடியாது. அதனால் உங்கள் மரணத்தின் மூலம் மற்றவர்களை பழிவாங்கவே முடியாது.

அதுமட்டுமில்லாமல் 19 வயதில் வருவது காதலே இல்லை. ஒரு இனக் கவர்ச்சியே ஆகும். முழுமையான காதல் என்பது நம்பகத்தன்மை, பாதுகாப்பு, பொருளாதார சுதந்திரம், சிந்தனை, செயல்கள் அனைத்திலும் முதிர்ச்சி அடைந்ததாக இருக்கவேண்டும். நீங்கள் காதல் வசப்பட்டதில் தவறில்லை. ஆனால் நீங்கள் எடுத்திருக்கும் முடிவு மிகவும் தவறானது.

நிஜமாகவே நீங்கள் உங்கள் காதலரை பழிவாங்கவேண்டும் என்றால், உங்களை வேண்டாம் என்று கூறிய அவரை முதலில் மறக்க பாருங்கள். அவர் முன்னிலையில் நன்கு படித்து அவர் இல்லாமலும், உங்களால் வாழ்க்கையில் ஜெயிக்கமுடியும் என்று வாழ்ந்து காட்டுங்கள். அதுதான் நீங்கள் அவருக்கு வழங்கும் தண்டனையாகவும், உங்களுக்கு நீங்கள் வழங்கும் பரிசாகவும் இருக்கும். எல்லாவற்றையும் விட 19 வருடங்கள் உங்களை உயிராக வளர்த்த உங்கள் பெற்றோரை நினைத்துப்பாருங்கள். உங்கள் மீது அன்பு இல்லாத காத லருக்காக, உங்கள் மீது உயிரையே வைத்திருக்கும் பெற்றோரை கண்ணீர்விடவைப்பது சரியா? யோசித்து பாருங்கள். உங்கள் முடிவு தவறானது என்பது உங்களுக்கே புரியும்.  

நான் திருமணமான பெண். வயது 30. ஒரு குழந்தையின் தாய். தனியார் வங்கியில் பணிபுரிகிறேன். என்னுடன் பணிபுரியும் 40 வயது நபரோடு நட்பாக பேசினேன். பின்பு அடிக்கடி ‘மெசேஜ்’ பரிமாறினோம். அடுத்து ‘காபி ஷாப்’ சென்றோம். நிறைய பேசினோம். சமீபத்தில் அவர் ஒரு மாத விடுப்பில் வெளிநாடு சென்றார். அவர் அருகில் இல்லாமல் போனதால், நான் எதையோ இழந்தது போல் உணர்கிறேன். உற்சாகம் இல்லை. அவர் எப்போது திரும்பி வருவார் என என் மனம் ஏங்குகிறது. என் மனது இப்படி அலைபாய என்ன காரணம்? எங்கள் நட்பு சரியானது தானா? (பெங்களூரு வாசகி)


உங்கள் மனது அலைபாய்வதை நீங்களே ஒத்துக்கொண்டுள்ளீர்கள். உங்களிடையேயான நட்பு சரியானது அல்ல. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அவரிடம் சறுக்கி விழுந்துவிடலாம். அது உங்கள் குடும்ப கவுரவத்திற்கு பங்கத்தை ஏற்படுத்திவிடும். நீங்கள் தாய். அதுபோல் அவரும் திருமணமாகி தந்தையாகவே இருப்பார். அவர் வாழ்க்கையும் நெருக் கடிக்கு உள்ளாகும். அதனால் இப்போது நீங்கள் அவசரமாக செய்ய வேண்டியது, உங்கள் கணவரோடு மனம் விட்டுப்பேசி பரஸ்பர அன்பையும், நம்பிக்கையையும் புதுப்பியுங்கள். அவரோடு அதிக நேரத்தை செலவிடுங்கள். அடிக்கடி சுற்றுலா செல்லுங்கள். அந்த நபர் உங்களோடு தொடர்பில் இல்லாத ஒரு மாதத்தை வாய்ப்பாக கருதி அவர் நினைவுகளில் இருந்து விடுபடுங்கள். பேச்சுக்கும், நட்புக்கும் எல்லை வைத்துக்கொள்ளுங்கள்.

அவர் திரும்பி வந்த பிறகு அவருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நண்பர்கள் எல்லோரிடமும் சகஜமாக பேசுங்கள். ‘காபி ஷாப்’க்கு மீண்டும் அழைத்தால், ‘அலுவலக நட்போடு நிறுத்திக் கொள்வோம்’ என்று கூறுங்கள்.

ஒரு வி‌ஷயத்தை நன்றாக மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கணவருக்கும்– உங்களுக்கும் இடையே பிரச்சினைகள் இருந்தால்தான் உறவு மீறல் உருவாகும். உறவு மீறல் தவறு என்பதால், உங்கள் கணவரோடு இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் பேசி சரி செய்யுங்கள். இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கையில் பெரும் பிரச்சினைகள் ஏற் படக்கூடும்.

– முனைவர் ஜி.பத்மபிரியா


‘மனதுக்கு மருந்து’  பகுதிக்கு உங்கள் கேள்விகளை  அனுப்பவேண்டிய முகவரி:

ஆசிரியர், (மனதுக்கு மருந்து)
குடும்பமலர், 86 ஈ.வி.கே.சம்பத் சாலை,
சென்னை– 600007



Next Story