குடியாத்தத்தில் தூக்கில் தொங்கிய பெண் சாவில் மர்மம் காதல் கணவர் மீது புகார்


குடியாத்தத்தில் தூக்கில் தொங்கிய பெண் சாவில் மர்மம் காதல் கணவர் மீது புகார்
x
தினத்தந்தி 20 March 2017 4:15 AM IST (Updated: 19 March 2017 8:41 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் தூக்கில் தொங்கிய பெண் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரது காதல் கணவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

குடியாத்தம்,

தூக்கில் தொங்கிய பெண்

குடியாத்தம் பிச்சனூர் அப்பு சுப்பையர் வீதி வளையல்கார சந்து பகுதியை சேர்ந்தவர் கிருபானந்தம் (வயது 38), ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி பரிமளா (35). கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் பிளஸ்–2 வகுப்பும், மற்றொரு மகள் பிளஸ்–1 வகுப்பும் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பரிமளா கிடந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கணவர் மீது புகார்

அங்கு பரிமளாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக பரிமளாவின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் பரிமளாவின் தாயார் விஜயலட்சுமி நேற்று புகார் அளித்தார். அந்த புகாரில், தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது காதல் கணவர் கிருபானந்தம் மீது சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story