பாலசமுத்திரம் அருகே வீட்டில் நகை, பணம் கொள்ளை திருடர்களை பிடிக்க முயன்ற கணவன், மனைவிக்கு அடி, உதை
பாலசமுத்திரம் மண்டலம் வெங்கலராஜுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோதேஸ் (வயது 55), விவசாயி.
ஸ்ரீகாளஹஸ்தி,
பாலசமுத்திரம் மண்டலம் வெங்கலராஜுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோதேஸ் (வயது 55), விவசாயி. இவர், தனது மனைவியோடு மாலை நேரத்தில் நிலத்துக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றார். தண்ணீர் பாய்ச்சி முடிந்ததும், நள்ளிரவில் நிலத்தில் இருந்து அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தனர். வீட்டின் வாசலில் ஒரு மோட்டார்சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. அடையாளம் தெரியாத 2 திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்து பீரோவை உடைத்து, அதில் வைத்திருந்த 42 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 8 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் செல்ல முயன்றனர்.
திருடர்களை பார்த்த கணவன், மனைவி அதிர்ச்சி அடைந்து திருடன்.. திருடன்.. எனச்கூச்சலிட்டு அலறினர். இதனால், ஆத்திரம் அடைந்த திருடர்கள் 2 பேரும் கணவன், மனைவியை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் மோட்டார்சைக்கிளை எடுத்துச் செல்ல முடியாமல், அங்கேயே அதனை விட்டு விட்டு நகை, பணத்துடன் இருவரும் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து மோதேஸ் பாலசமுத்திரம் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வர்லு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய திருடர்களை தேடி வருகின்றனர்.