ரேஷன்கடைகளுக்கு போதுமான பொருட்கள் ஒதுக்கீடு செய்யா விட்டால் போராட்டம் பொதுவினியோக ஊழியர் சங்கம் அறிவிப்பு
ரேஷன்கடைகளில் நூறு சதவீதம் அத்தியாவசியப்பொருட்கள் இருப்பு என்கிற நிலை ஏற்படுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்
ராஜபாளையம்,
தமிழ்நாடு பொது வினியோக ஊழியர் சங்க மாவட்ட கூட்டம் மாவட்ட தலைவர் செந்திவடிவேல் தலைமையில் ராஜபாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் ராமு, கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் செல்லம், பொருளாளர் குமரிச்செல்வன், மாநில துணைத்தலைவர்கள் தொந்தியப்பன், மனோகரன், மாவட்ட பொருளாளர் ராமர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் செல்லம் பேசியதாவது:–
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் ஒதுக்கீடு மிகக்குறைவாக உள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பொருட்களை முழுமையாக ஒதுக்கீடு செய்து தந்துள்ளோம் என்றும், இல்லை எனில் தன்னிடம் புகார் தெரிவிக்கலாம் எனவும் கூறுகின்றனர். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. உண்மையில் ரேஷன் கடைகளில் நூறு சதவீதம் பொருட்கள் ஒதுக்கீடு என்பது இல்லை என்ற நிலை தான் தற்போது உள்ளது.
போராட்டம்மேலும் அரிசியை பொருத்தமட்டில் இந்த மாதத்தில் எவ்வளவு ஒதுக்கீடு செய்துள்ளனர் என்று தெரியவில்லை. குடும்ப அட்டைதாரர்களுக்கு எத்தனை கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. போதுமான அளவுக்கு பொருட்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த நிலையில் பி.ஓ.எஸ்.எனப்படும் குடும்ப அட்டைதாரர் பதிவு எந்திரம் ஒவ்வொரு கடைகளிலும் வழங்கப்பட்டு அதன் மூலம் பொருட்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முறையான பயிற்சி அளிக்காமல் எந்திரத்தினை கையாளுவது ரேஷன்கடை ஊழியர்களுக்கு சிரமமாக உள்ளது.
இந்த குறைகளை எல்லாம் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் சரிசெய்யாவிடில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வழங்கப்பட்டிருக்கும் குடும்ப அட்டைதாரர் பதிவு எந்திரத்தினை திரும்ப ஒப்படைத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கார்த்திகேயன், மாரியப்பன், முருகேசன் உள்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்புச் செயலாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.