காப்புக்காடுகளில் கடும் வறட்சி: வனவிலங்குகளுக்காக தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டன
காப்புக்காடுகளில் கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகளை பாதுகாக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட அரூர், கோட்டப்பட்டி, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ள பகுதிகளில் மான்கள், காட்டுப்பன்றிகள், மயில், முயல், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. பருவமழை பொய்த்து போனதால் வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வறண்டு விட்டது. இதனால் வனவிலங்குகள் அருகில் உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் தேடி வருகின்றன.
அப்போது வனவிலங்குகள் வாகனங்களில் அடிப்பட்டும், நாய்கள் கடித்து குதறியும் இறந்து வருகின்றன. இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறை சார்பில் தென்கரைக்கோட்டை பாஞ்சாலி நகர் வனப்பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து சோலார் மின்தகடுகள் பொருத்தி அதன்மூலம் தண்ணீர் எடுத்து தொட்டிகளில் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது நிலவும் கடும் வறட்சியால் இந்த ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன.
தண்ணீர் நிரப்பும் பணிஇதனால் வனவிலங்குகளை பாதுகாக்க டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு வந்து தொட்டிகளில் நிரப்ப அரூர் மாவட்ட வன அலுவலர் செண்பகபிரியா உத்தரவிட்டார். இதையடுத்து வனத்துறை சார்பில் டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்து காப்புக்காடுகளில் உள்ள தொட்டிகளில் நிரப்பும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை வன அலுவலர் செண்பகபிரியா மற்றும் வனச்சரக அலுவலர்கள் கிருஷ்ணன், கோவிந்தராஜ் மற்றும் வனத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் தொட்டிகளில் தண்ணீர் குடிக்க வரும் வன விலங்குகளை மர்ம ஆசாமிகள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.