கற்கும் பாரதம் சார்பில் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்து தேர்வு 201 மையங்களில் நடைபெற்றது
கற்கும் பாரதம் சார்பில் 201 மையங்களில் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்து தேர்வு நடைபெற்றது.
தர்மபுரி,
தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் எழுத, படிக்க தெரியாத வயது வந்தவர்களுக்கான கல்வி இயக்ககம் சார்பில் எழுத, படிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ஆண்டுதோறும் கற்கும் பாரதம் சார்பில் அடிப்படை எழுத்து தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டத்தில் 201 மையங்களில் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்து 330 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். ஒவ்வொரு மையத்திலும் அறை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் இந்த தேர்வு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 25 பறக்கும் படையினர் ஆங்காங்கே மையங்களின் ஆய்வு செய்தனர்.
அதிகாரி ஆய்வுஇந்த தேர்வு மையங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, தொடக்க கல்வி இணை இயக்குனர் சசிகலா, மாநில கற்கும் பாரத ஒருங்கிணைப்பாளர் குமரகுரு, தர்மபுரி மாவட்ட கற்கும் பாரத ஒருங்கிணைப்பாளர் விமலன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஒவ்வொரு மையத்திலும் தேர்வு எழுதுபவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அவர்கள் மைய பொறுப்பாளர்களிடம் கேட்டறிந்தனர்.
மாவட்டம் முழுவதும் 16 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கற்கும் பாரத ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள், மைய ஒருங்கிணைப்பாளர்கள் இந்த அடிப்படை எழுத்து தேர்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த தேர்வு விடைத்தாள்கள் 3 நாட்களுக்குள் திருத்தி முடிக்கப்பட்டு அதற்கான முடிவுகள் அந்தந்த கற்கும் பாரத மையங்களில் வெளியிடப்படும்.