திருச்செங்கோட்டில் கொடுக்கல், வாங்கல் தகராறில் மரக்கடை தொழிலாளி அரிவாளால் வெட்டிக்கொலை 5 பேர் கும்பல் வெறிச்செயல்
திருச்செங்கோட்டில் கொடுக்கல், வாங்கல் தகராறில் மரக்கடை தொழிலாளி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
திருச்செங்கோடு,
மரக்கடை தொழிலாளிதிருச்செங்கோட்டில் தேவனாங்குறிச்சி ரோட்டில் பெரிய தெப்பக்குளம் எதிரில் உள்ள ஒரு மரக்கடையில் ஒக்கிலிப்பட்டியை சேர்ந்த வெங்கடேசன்(வயது28) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி காயத்ரி என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். சாணார் பாளையத்தை சேர்ந்தவர் விஜய்(22).
வெங்கடேசனுக்கும், விஜய்க்கும் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்தது. நேற்று வழக்கம் போல் வெங்கடேசன் மரக்கடைக்கு வேலைக்கு வந்தார். அப்போது விஜய் தலைமையில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் வெங்கடேசனை அழைத்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.
அரிவாளால் வெட்டிக்கொலைஇதில் விஜய் கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென வெங்கடேசனை சரமாரியாக அரிவாளில் வெட்டினர். பின்னர் அவர்கள் மோட்டார்சைக்கிள்களில் தப்பிச்சென்று விட்டனர். இந்த நிலையில் கழுத்து மற்றும் பின் மண்டையில் அரிவாள் வெட்டு விழுந்ததில் சரிந்து விழுந்த வெங்கடேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறிது நேரத்தில் வெங்கடேசன் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து வெறிச்செயலில் ஈடுபட்ட விஜய் தலைமையிலான கும்பலை சேர்ந்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.