தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது எப்போது?


தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது எப்போது?
x
தினத்தந்தி 20 March 2017 4:00 AM IST (Updated: 19 March 2017 10:29 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தனியார் நிலங்களில் காடுபோல் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது எப்போது? என்று சமூக நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மந்தகதியில் நடைபெறும் இந்த பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சீமை கருவேல மரங்களை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகம் முழுவதும் வியாபித்து அழிக்க முடியாத வகையில் பரவி கிடக்கும் சீமை கருவேல மரங்கள், நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சி விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றவும், எதிர்கால சந்ததியினருக்கு போதிய அளவில் தண்ணீர் கிடைக்கவும் ஏதுவாக சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த பணிகளை கண்காணிப்பதற்கு மாவட்டந்தோறும் குழுக்களையும் நியமித்தனர்.

இத்துடன் விட்டு விடாமல் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் முழுமையான அளவில் நடைபெறுகிறதா என்பதை ஐகோர்ட்டு நீதிபதிகளே பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது இந்த பணிகள் முழுமையான அளவில் நடைபெறவில்லை என்பதை அறிந்த நீதிபதிகள், பணிகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அரசு நிலங்கள்

ஐகோர்ட்டு நீதிபதிகளின் உத்தரவையடுத்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் வேகம் காட்டினார்கள். ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட குழுவினரும் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர். அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் வளாகங்களில் நின்றிருந்த சீமை கருவேல மரங்கள் பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் அகற்றப்பட்டன. ஆனாலும் அரசு நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள் இன்னும் முழுமையாக அகற்றப்படாமலேயே உள்ளன என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆறு மற்றும் அதன் கிளை கால்வாய்களில் உள்ள சீமை கருவேல மரங்கள் இன்னும் அகற்றப்பட்டதாகவும் தெரியவில்லை. அவற்றை அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. ஸ்ரீவைகுண்டம் அணையின் கீழ் பகுதியில் ஆற்றின் மையப்பகுதியில் சீமை கருவேல மரங்கள் காடு போன்று அடர்ந்து காணப்படுகிறது. தற்போது கோடை காலமாக உள்ளதால் இந்த நேரத்தை பயன்படுத்தி அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். மழைக்காலம் தொடங்கி விட்டால் இந்த பணிகளை முழுமையான அளவில் மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்படும்.

தனியார் நிலங்கள்

அரசு நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள் இன்னும் முழுமையாக அகற்றப்படாத நிலையில் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள் எப்போது அகற்றப்படும் என்பதற்கான விடை தெரியவில்லை. தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை, நில உரிமைதாரர்களே அகற்ற வேண்டும். இல்லை என்றால் அரசு சார்பில் அகற்றிவிட்டு, அதற்கு உண்டான செலவு தொகையை இருமடங்காக வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இதற்கு காலக்கெடுவும் விதிக்கப்பட்டு அதுவும் முடிந்து விட்டது.

பல்வேறு இடங்களில் தனியார் நிலங்களில் அடர்ந்த காடு போல் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து கிடக்கின்றன. நெல்லை நகரில் பல இடங்களில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்த வனப்பகுதி போல் காணப்படுகின்றன. தனியார் நிலங்களில் உள்ள கருவேல மரங்களை நில உரிமையாளர்கள் வெட்டி, வேருடன் அகற்ற முன்வரவில்லை. ஒருசிலர் மீண்டும் அதில் அறுவடை செய்ய வேண்டும் என்பதற்காக அடிப்பாகத்தை விட்டு விட்டு, மேலே உள்ள பகுதியை மட்டும் வெட்டி அகற்றி உள்ளனர். இவ்வாறு செய்வதால் எந்தவித பயனும் இல்லை.

சீமை கருவேல மரங்களை அகற்றும் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறதோ? என்று எண்ண தோன்றுகிறது. சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு தனியார் நில உரிமையாளர்கள் முன்வராத பட்சத்தில் அரசே இந்த பணியை ஏற்று செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கும் விவசாயிகள் சீமை கருவேல மரத்தின் மூலம் ஏதேனும் வருமானம் கிடைக்கும் என்பதால் அதை அகற்ற அவர்கள் முன்வரவில்லையோ என்று எண்ண தோன்றுகிறது.

அதனால் இந்த திட்டம் வெற்றி பெற வேண்டுமெனில் மாவட்ட நிர்வாகங்கள் மும்முரமாக இந்த பணியை தொடங்கி, குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து முடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். பொது மக்களும் இதையே அரசிடம் எதிர்பார்க்கிறார்கள்.

எந்த ஒரு திட்டத்தையும் அரசால் மட்டுமே செயல்படுத்தி விட முடியாது. அதற்கு பொதுமக்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே அந்த திட்டம் நிறைவேறும். சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை பொறுத்தவரையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்த்து இருப்பதை விட பொதுமக்களின் பங்களிப்பும், வேகமும் தான் முக்கியம். எனவே இதில் பொதுமக்கள்தான் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

20 சதவீதம் மட்டுமே...

இந்த கோடை காலத்தில் தென் மாவட்டங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்றி விட்டால் வருகிற மழைக்காலத்தில் குளங்களில் தண்ணீர் அதிக அளவில் தேக்கி வைக்கவும், அந்த தண்ணீரை குடிநீருக்கும், விவசாயத்துக்கு முழுமையாக பயன்படுத்தவும் முடியும். மேலும் நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும்.

நெல்லை மாவட்டத்தில் இதுவரையில், 20 சதவீதம் மட்டுமே சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு உள்ளன என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மிஞ்சி இருக்கும் பெரும்பாலான சீமைகருவேல மரங்களை அகற்றும் பணியில் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

எனவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும்.


Next Story