‘லஞ்சம் தர மறுத்ததால் கைது செய்வதாக மிரட்டினார்’ இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவு


‘லஞ்சம் தர மறுத்ததால் கைது செய்வதாக மிரட்டினார்’ இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவு
x
தினத்தந்தி 20 March 2017 4:15 AM IST (Updated: 19 March 2017 10:37 PM IST)
t-max-icont-min-icon

லஞ்சம் தர மறுத்ததால் பொய் வழக்குப்போட்டு கைது

மதுரை,

ஐகோர்ட்டில் மனு

திண்டுக்கல் மாவட்டம் ஆலத்தூரான்பட்டியை சேர்ந்தவர் அன்பு செல்வன். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

நான் ஹாலோ பிளாக் செங்கல் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறேன். இங்கு வட மாநிலத்தை சேர்ந்த சிலர் வேலை பார்க்கின்றனர். கடந்த 2014–ல் ஒரு பெண் காணாமல் போனது தொடர்பாக கன்னிவாடி போலீசார் என்னிடம் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணைக்காக உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறி என்னிடம் ரூ.2 லட்சம் தருமாறு கேட்டனர். நான் மறுத்து விட்டேன். இதனை தொடர்ந்து பொய் வழக்கில் என்னை கைது செய்வதாக போலீசார் மிரட்டினர். மேலும் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் அடிக்கடி தொந்தரவு கொடுத்தனர்.

இதற்கிடையே காணாமல் போன அந்த பெண்ணின் தந்தை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அப்போது அந்த பெண்ணை மீட்டு போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். படிப்பில் விருப்பம் இல்லாததால், தான் விரும்பியே வீட்டை விட்டு சென்றதாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் அந்த பெண் கோர்ட்டில் கூறியிருந்தார்.

நான் எந்த தவறும் செய்யாத நிலையில், லஞ்சம் தர மறுத்ததால் கைது செய்வதாக மிரட்டிய கன்னிவாடி இன்ஸ்பெக்டர் திருவானந்தம் மற்றும் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இந்த மனுவை நீதிபதி பி.கோகுல் தாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சம்பந்தபட்டவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:– காணாமல் போனதாக கூறப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பார்க்கும் போது மனுதாரர், அவரது குடும்பத்தினருக்கு இந்த சம்பவத்தில் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்கு பதியாமல் முடிப்பது நல்லதல்ல. ஒழுங்கு நடவடிக்கை என்பது மட்டும் போதுமானதல்ல. மனுதாரர் புகாரின் மீது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story