வணிகர்கள் சங்கம் சார்பில் வெளிநாட்டு குளிர்பானங்களை ரோட்டில் கொட்டி அழிப்பு கடைகளில் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது
வேலூரில் வெளிநாட்டு குளிர்பானங்களை ரோட்டில் கொட்டி வணிகர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்,
கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பான விற்பனையை தடுக்க வணிகர்கள் சங்கம் சார்பில் வேலூர் மண்டித் தெருவில் நேற்று விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. வணிகர்கள் சங்க பேரமைப்பின் மாவட்ட செயலாளர் ஞானவேலு தலைமை தாங்கினார். அனைத்து வணிகர்கள் சங்க செயலாளர் பாபுஅசோகன் வரவேற்றார். மாநகர பொருளாளர் அருண்பிரசாத், வேலூர் காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் பாலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோக், பெப்சி போன்ற குளிர்பானங்களை இனிமேல் வணிகர்கள் வாங்கி விற்கக்கூடாது. அதே நேரத்தில் பொதுமக்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்காத இளநீர், நுங்கு போன்ற இயற்கை பானங்களை வாங்கி விற்பது என்று முடிவு செய்யப்பட்டது.
ஸ்டிக்கர் ஒட்டினர்கூட்டத்தை தொடர்ந்து, வணிகர்கள் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை ரோட்டில் கீழே கொட்டி அழித்தனர். தொடர்ந்து மண்டித்தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டினர். அதில் வெளிநாட்டு குளிர்பானங்களை புறக்கணிப்போம், இந்தியாவின் பொருளாதாரத்தை காப்போம் என்று எழுதப்பட்டிருந்தது.
இதில் வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.