ஆறுகளில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?


ஆறுகளில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
x
தினத்தந்தி 20 March 2017 4:45 AM IST (Updated: 20 March 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு, வைகை, கொட்டக்குடி உள்ளிட்ட ஆறுகளில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? விவசாயிகள்–பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தேனி

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு, வைகை, கொட்டக்குடி, வராகநதி ஆகிய ஆறுகளில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

தேனியின் ஆறுகள்

மலையும், மலை சார்ந்த இடத்தை தன்னகத்தே கொண்டதாக தேனி மாவட்டம் விளங்குகிறது. தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மலை மற்றும் மலையடிவார பகுதிகளில் அமைந்து உள்ளன. மலைகள் என்றாலே நதி பிறந்து, தவழ்ந்து ஓடுவது இயற்கை. மலைகள் சார்ந்த தேனி மாவட்டத்திலும் முல்லைப்பெரியாறு, வைகை, கொட்டக்குடி, வராகநதி, மஞ்சளாறு போன்ற ஆறுகள் ஓடுகின்றன.

இந்த ஆறுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சிறப்புகள் உள்ளன. சிறப்பு வாய்ந்த ஆறுகளில் உள்ள அவலமான ஒரு ஒற்றுமை என்றால் அது சாக்கடை கழிவுநீர் கலப்பதாகவே உள்ளது. அந்த ஆறுகளின் சிறப்புகளையும் தற்போது அவை சீர்கெட்டு கிடப்பதையும் சற்று விரிவாக பார்ப்போம்:–

முல்லைப்பெரியாறு

முல்லைப்பெரியாறு என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே தேனி மாவட்ட மக்களுக்கு உடலில் ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு ஏற்படுவது இயல்பு. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த மாவட்டங்களின் வறட்சியை போக்கும் வரப்பிரசாதமாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்து நாட்டின் பொறியாளர் கர்னல் ஜான்பென்னி குவிக் என்பவரால் கட்டப்பட்டது இந்த அணை. பல்வேறு தியாகத்திற்கு இடையே, இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டு கட்டப்பட்டது இந்த அணை.

தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப் முதல் தேனி வரை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என பல பகுதிகளை கடந்து வைகை ஆற்றுடன் சங்கமிக்கிறது. வீரபாண்டியில் முல்லைப்பெரியாற்றின் கரையோரம் தான் கண்ணீர்வரமுடையார் கோவில், கவுமாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. சிறப்பு மிக்க இந்த ஆற்றில் புனித நீராடுவது பக்தர்களின் வழக்கம்.

லோயர்கேம்ப்பில் தொடங்கி, கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், கூழையனூர், உப்புக்கோட்டை, வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும் ஊருக்குள் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் இந்த ஆற்றில் கலக்கிறது. இதனால், ஆற்றில் தண்ணீர் குறைவாக வரும் காலங்களில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த பகுதிகளுக்கான குடிநீர் திட்டங்களும் இந்த ஆற்றில் இருந்தே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வளம் இழக்கும் வைகை ஆறு

வருசநாடு அருகே உற்பத்தியாகும் மூலவைகை ஆறு முருக்கோடை, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்பட பல்வேறு பகுதிகளை கடந்து தேனி அருகே அரப்படித்தேவன்பட்டி பகுதியில் வைகை அணையில் சேர்கிறது. இந்த ஆற்றிலும் பல இடங்களில் சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளும் சாக்கடை நீருடன் ஆற்றில் கலக்கிறது. பல மாதங்கள் தண்ணீர் ஓடிய இந்த ஆற்றில் கடந்த சில ஆண்டுகளாக சில நாட்கள் மட்டுமே தண்ணீர் வரத்து இருக்கிறது.

அவ்வாறு தண்ணீர் வரும் நாட்களில் பிளாஸ்டிக் கழிவுகள், சாக்கடை கழிவுகள் தண்ணீரில் கலந்து வருகிறது. இதனால் ஆற்றின் வளம் கெட்டுப்போகிறது.

குமட்டல் எடுக்கும் கொட்டக்குடி ஆறு

போடி அருகே கொட்டக்குடி பகுதியில் கொட்டக்குடி ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு போடி, மீனாட்சிபுரம், அணைக்கரைப்பட்டி, கோடாங்கிபட்டி, பூதிப்புரம், பழனிசெட்டிபட்டி பகுதிகளை கடந்து தேனியில் முல்லைப்பெரியாற்றுடன் சங்கமிக்கிறது. இந்த ஆறு படும் அவலத்திற்கு அளவே கிடையாது என்று கூறலாம். கொட்டக்குடி பகுதியில் இந்த ஆற்றுத் தண்ணீர் இளநீர் போல் சுவையாய் இருக்கும். கண்ணாடி போல் பளிச்சிடும். மலைக்கிராமங்களை கடந்து போடிக்கு வந்த பிறகு சாக்கடை கழிவுநீர் சக்கமிக்கத் தொடங்கி விடுகிறது. அங்கிருந்து தேனி வரை உள்ள ஊர்களில் இருந்து சாக்கடை கழிவுநீர் இந்த ஆற்றில் கலக்கிறது. மழை பெய்யாத காலங்களில் இந்த ஆற்று பக்கம் சென்றாலே குமட்டல் எடுக்கும் வகையில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இந்த ஆற்றின் மூலம் புதிய குடிநீர் திட்டங்களை செயல்படுத்த கழிவுநீர் பெரும் தடங்களாக உள்ளது.

வராகநதியின் அவலம்

பெரியகுளம் நகர் வழியாக வராகநதி செல்கிறது. இந்த நதிக்கரையில் தான் பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்து உள்ளது. இங்கு நதியின் இருபுறமும் ஆண், பெண் மருத மரங்கள் அமைந்து உள்ளது கூடுதல் சிறப்பு. இந்த ஆற்றில் காலம் காலமாக கழிவுகள் கலந்து வருகிறது.

மழை பெய்யும் நாட்களில் மழைவெள்ளத்தில் கழிவுகள் அடித்துச் செல்லப்படுவதும், மழை நின்ற பின் மீண்டும் கழிவுநீர் ஓடுவதும் இந்த ஆற்றின் இயல்பாகி விட்டது. நகரின் மையப்பகுதியில் ஓடும் இந்த ஆறால் நகர் பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

தீர்வு என்ன?

இவ்வாறு தேனி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் சாக்கடை கழிவுநீர் கலப்பதால் ஆற்றின் வளம் கெட்டுப் போகிறது. ஆறுகளில் குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் எடுத்து மக்களுக்கு வினியோகம் செய்வதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஏனெனில் பெரும்பாலான பகுதிகளுக்கு முறையான சுத்திகரிப்பு இன்றி ஆற்று தண்ணீர் நேரடியாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

முன்பெல்லாம் தெருக்களில் மண் சாலைகள் இருக்கும், சாக்கடை கால்வாயின் தரைப்பகுதியில் சிமெண்டு பூச்சு இல்லாமல் மண் தரையாக இருக்கும். கால்வாய்க்கு வரும் தண்ணீர் நிலத்திற்கு அடியில் சென்று விடும். சாக்கடையில் தேங்கும் குப்பைகள் அவ்வப்போது உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தூர்வாரப்படும். அவ்வாறு அள்ளப்படும் போது மண், குப்பைகள் என எல்லாம் அள்ளி வைக்கப்பட்டு, உலர்ந்த பின்பு அவை அப்புறப்படுத்தப்படும். நாகரிக வளர்ச்சி காரணமாக சாக்கடை கால்வாயின் தரைப்பகுதியும் சிமெண்டு கலவையால் பூசப்பட்டது. இதனால் தண்ணீர் பூமிக்கு அடியில் செல்வது தடைபட்டது. அத்துடன் பிளாஸ்டிக் குப்பைகளும் சாக்கடை கால்வாயில் வீசப்படுவதால் கழிவுநீர் ஓட்டமும் தடைபட்டது. இதனால் சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டாலும் கழிவுநீர் அருகில் உள்ள நீர்நிலைகள், நதிகளை நோக்கி திருப்பிவிடப்பட்டன.

இதன் விளைவே தற்போது ஆறுகளும், நதிகளும் சீர்கெட்டுப் போகும் நிலைமை உருவானது. எனவே ஆறுகளின் வளத்தை பாதுகாக்கவும், ஆற்றுத் தண்ணீர் சுகாதாரமாக செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

எளிய முறை

தேனி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் சாக்கடை கழிவுநீர் கலக்காமல் தடுக்க ஆற்றின் இருபுறமும் தனி கால்வாய்கள் அமைத்து அந்த கால்வாய்கள் வழியாக கழிவுநீரை கொண்டு செல்லவும், இந்த தண்ணீரை சுத்திகரிப்பு செய்து விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும், தண்ணீரை சுத்திகரிப்பு செய்து ஆற்றில் விட வேண்டும் என்றும் விவசாயிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன. இருப்பினும் இதற்கான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

ஆற்றின் ஓரத்தில் கழிவுநீர் செல்லும் தனி கால்வாய் அமைக்கவோ, ஆறுகளில் சாக்கடை கழிவுநீர் கலக்கும் இடங்களிலேயே சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யவோ நடவடிக்கை எடுக்கலாம். இவற்றிற்கு அரசு நிதி தேவைப்படும். அதிக நிதி தேவைப்படலாம். அதே நேரத்தில் இயற்கையாக உள்ள வழிகளையும் அரசு பின்பற்றலாம். அதாவது, ஆற்றுக்குள் கழிவுநீர் கலக்கும் இடத்தில் பெரிய குழி தோண்டி அதில் கற்கள், ஆற்று மணலை போட்டு கழிவுநீரை அதில் விழ வைக்கலாம். இவ்வாறு கற்கள், மணலில் சாக்கடை கழிவுநீர் விழுந்து அதில் இருந்து வெளியேறும் போது அவை இயற்கையாகவே சுத்திகரிக்கப்படும். எனவே இதுபோன்ற எளிய நடைமுறைகளையாவது மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று தேனி மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், ஆறுகளில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க நிரந்தர தீர்வு மேற்கொள்வதற்கான திட்டங்களை செயல்படுத்தவும் அரசு முன்வர வேண்டும் என்பது பொதுமக்கள், விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story