ஏலசீட்டு மோசடி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


ஏலசீட்டு மோசடி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 20 March 2017 3:45 AM IST (Updated: 20 March 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

ஏலசீட்டு மோசடி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா அறிவுரை கூறினார்.

ஊட்டி,

போலீஸ்–பொதுமக்கள் நல்லுறவு பயிற்சி முகாம் ஊட்டியில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமை தாங்கி பேசியதாவது:– நீலகிரி மாவட்டத்தில் 250–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் ஒரு கிராமத்திற்கு 10 முதல் 15 பேர் வரை போலீஸ்–பொதுமக்கள் நல்லுறவு அமைப்பில் இருக்க வேண்டும். தற்போது 300 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி பெற்றவர்கள் உங்களது கிராமங்களில் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும்.

ஏலசீட்டு மோசடி

கிராமங்களை குறி வைத்து நடைபெறும் ஏலசீட்டு மோசடி, நகை மோசடி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீலகிரி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 8 லட்சமாகும். இதுதவிர ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். இவர்கள் அனைவரின் பாதுகாப்பிற்காக வெறும் ஆயிரம் போலீசார் மட்டுமே உள்ளனர்.

போலீசார் வாகன சோதனை நடத்தும்போது பொதுமக்கள் இடையே சந்தேகம் ஏற்படுகிறது. திருடர்கள் நடமாட்டத்தை கண்டறியவும், சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டறியும், மது போதையில் வாகனங்கள் இயக்குவதை தடுக்கவும் இதுபோன்ற சோதனைகள் அவசியமாகிறது.

ராணுவ பயிற்சி

கிராமங்களில் சந்தேகப்படும்படியாக ஒருவர் அளவுக்கு அதிகமாக பணம் செலவு செய்தாலோ அல்லது கூட்டங்கள் நடத்தினாலோ போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். போலீசார் பண்டிகை காலங்களில் விடுமுறை இன்றி வேலை பார்ப்பது குறித்து நீங்கள் பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும். அப்போதுதான் போலீசார் மீது பொதுமக்களுக்கு ஒரு நட்பு ஏற்படும்.

தற்போது 300 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. வருங்காலத்தில் 2 ஆயிரம் பேர் வரை பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பொதுமக்கள் கட்டாயமாக 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி எடுக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்களுக்கும், பாதுகாப்பு துறையினருக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. இந்த பயிற்சி எடுக்கும் நீங்கள் போலீசாருக்கு உதவியாக இருப்பதோடு, சட்டத்திற்குட்பட்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சென்னையில் இருந்து வந்த பயிற்றுனர்கள் சினேகா, ஜான்ஜோசப் ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலும் கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்த நபர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மணிகண்டன், திருமேனி, முத்தமிழ், இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், லாரன்ஸ், சிவக்குமார், வீரபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story