கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 30–ம் தேதி தொடங்குகிறது தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,770 ஆக குறைப்பு
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 30–ந் தேதி தொடங்குகிறது. தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,770 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 30–ந் தேதி தொடங்குகிறது. தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,770 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 30–ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வு ஏப்ரல் 12–ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாள் அதாவது 30–ந் தேதி கன்னடம், தமிழ் உள்பட மொழி தேர்வு, ஏப்ரல் 1–ந் தேதி சமஸ்கிருதம், 3–ந் தேதி கணிதம், 5–ந் தேதி ஆங்கிலம், 7–ந் தேதி அறிவியல், 10–ந் தேதி இந்தி, கொங்கணி, துளு, 12–ந் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும்.
இந்த தேர்வுகள் தினமும் காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்குகிறது. கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 3,082 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,770 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வாணைய இயக்குனர் யசோதா போபண்ணா கூறியதாவது:–
கட்டமைப்பு வசதிகள்தேர்வு மையங்களில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் தேர்வு மையங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் சில தேர்வு மையங்களில் 700 மாணவர்கள் வரை அமர்ந்து தேர்வு எழுத முடியும். ஆனால் அங்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் 350 பேர் வரை மட்டுமே தேர்வு எழுத அனுமதித்தோம். இதனால் தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தன.
தேர்வு மையங்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு அனுப்பும் பணி எளிதாகிறது. இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 30–ந் தேதி தொடங்குகிறது. இந்த முறை மாணவர்கள் தேர்வில் புதிய முறையை அறிமுகம் செய்கிறோம். அதாவது கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் தனித்தனியாக வழங்கப்படும்.
கண்காணிப்பு கேமராக்கள்எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை பொறுத்த வரையில் கடந்த காலங்களில் கேள்வித்தாள்கள் முன்கூட்டியே வெளியான வரலாறு இல்லை. அதனால் தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துமாறு நாங்கள் உத்தரவை எதையும் பிறப்பிக்கவில்லை. ஆனால் கேள்வித்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் சேகரித்து வைக்கப்படும் தேர்வு மையங்களில் மட்டும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துமாறு அறிவுறுத்தி உள்ளோம். கேள்வித்தாள்களை நிர்வகிப்பதில் அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்றுகிறார்கள்.
அரசு பள்ளிகளில் போதுமான அளவுக்கு நிதி வசதி இல்லாததால் கண்காணிப்பு கேமராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று நாங்கள் உத்தரவிடவில்லை. இந்த ஆண்டு தேர்வை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். எந்த குழப்பமும் இன்றி தேர்வு சுமுகமாக நடைபெறும். மாணவர்கள் தவறான வதந்திகளுக்கு செவி சாய்க்காமல் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு யசோதா போபண்ணா கூறினார்.