கல்குவாரியில் 2 பேர் பலி: அணி மாறுவேன் என மிரட்டல் விடுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ திடீர் ‘பல்டி’


கல்குவாரியில் 2 பேர் பலி: அணி மாறுவேன் என மிரட்டல் விடுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ திடீர் ‘பல்டி’
x
தினத்தந்தி 20 March 2017 4:15 AM IST (Updated: 20 March 2017 12:55 AM IST)
t-max-icont-min-icon

கல்குவாரியில் 2 பேர் பலியான சம்பவம்: அணி மாறுவேன் என மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. திடீர் ‘பல்டி’

கோவை,

கோவை அருகே கல்குவாரியில் 2 பேர் பலியான சம்பவத்தில் உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அணி மாறுவேன் என்று மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சூலூர் கனகராஜ் நேற்று திடீரென தனது கருத்தை வாபஸ் பெற்றார்.

குவாரியில் 2 பேர் பலி

கோவையை அடுத்த சுல்தான்பேட்டை பெரியகுயிலி என்ற இடத்தில் ஆனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. சம்பவத்தன்று இங்கு பாறை உருண்டு விழுந்து 2 தொழிலாளர்கள் இறந்தனர். விபத்து நடந்த கல்குவாரிக்கு சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.கனகராஜ் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த கனகராஜ் எம்.எல்.ஏ. பொது மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

அனுமதியில் ஊழல்

விபத்து நடந்த கல்குவாரியில் 400 அடி வரை குழிதோண்டி கல் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு வேலை பார்த்த 2 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். முறையான பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்காமல் தொழிலாளர்கள் பணி செய்ய அனுமதிக்கப்பட்டதால் தான் விபத்து நிகழ்ந்துள்ளது. ஆனால் கனிமவளத்துறை உதவி இயக்குனர், தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி யாரும் இங்கு வந்து ஆய்வு செய்யவில்லை. விபத்து என்று வழக்குப்பதிவு செய்து பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் கொடுத்து அனுப்பி விட்டனர்.

இந்த கல்குவாரி மூலம் அரசுக்கு ரூ.50 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்துள்ளது. அதிகாரிகள் மற்றும் போலீசார் லஞ்சம் பெற்றுக்கொண்டு தொழிலாளர்கள் விபத்தில் இறந்ததாக பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அணி மாறுவேன்

விபத்துக்கு காரணமான கல்குவாரி உரிமையாளர் மற்றும் முறையாக செயல்படாத அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து விலகி வேறு அணிக்கு (ஓ.பன்னீர்செல்வம் அணி) செல்வேன். வேறு அணி என்பது மக்களுக்கான அணி.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரை சந்தித்து இந்த கல்குவாரியை மூட வலியுறுத்துவேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். 10 நாட்களுக்குள் குவாரி உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் அணி மாறுவது உறுதி. மக்கள் விரும்பும் அணி எதுவோ அந்த அணிக்கு செல்வேன். இல்லை என்றால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கனகராஜ் எம்.எல்.ஏ. அணி மாறுவேன் என்று கூறியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் கனகராஜ் எம்.எல்.ஏ.விடம் இதுபற்றி நேற்று கேட்டபோது அவர் கூறியதாவது:–

திடீர் பல்டி

எம்.எல்.ஏ. சொல்லியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் எம்.எல்.ஏ.வாக இருந்து என்ன பயன்? எனக்கு வேறு வழி இல்லாததால் அவ்வாறு கூறினேன்.

ஆனால் நான் அளித்த புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். எனவே நான் அணி மாறுவதாக பேசியதை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story