ஓய்வூதியதாரர்களுக்கு ஆதரவாக அரசு பஸ் டிரைவர்கள் திடீர் வேலைநிறுத்தம்


ஓய்வூதியதாரர்களுக்கு ஆதரவாக அரசு பஸ் டிரைவர்கள் திடீர் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 20 March 2017 4:45 AM IST (Updated: 20 March 2017 12:55 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதியதாரர்களுக்கு ஆதரவாக கோவையில் அரசு பஸ் டிரைவர்கள் திடீர் வேலைநிறுத்தம் பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதி

கோவை,

ஓய்வூதியதாரர்களுக்கு ஆதரவாக கோவையில் நேற்று அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ்கள் ஓடாததால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

ஓய்வூதியதாரர்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் போக்குவரத்து கழக அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2 மாதங்களாக அவர்களுக்கு 1–ந் தேதி ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து அவர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 1–ந் தேதியும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஓய்வூதியத்தை அரசே வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போக்குவரத்து கழக டெப்போ முன்பு ஓய்வூதியதாரர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திடீர் வேலைநிறுத்தம்

இவர்களுக்கு ஆதரவாக கோவை சுங்கம் டெப்போ கிளை 1, கிளை 2–ல் பணியாற்றும் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேற்று அதிகாலை முதல் திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பி சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் சுங்கம் கிளை–1 மற்றும் 2 டெப்போவிலிருந்து 200 பஸ்கள் புறப்படவில்லை. அரசு பஸ்கள் அனைத்தும் டெப்போவிலும், அதற்கு அருகில் சாலையோரமும் நிறுத்தி வைக்கப்பட்டன.

2 டெப்போக்களிலிருந்து நேற்று முழுவதும் பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். இதைத்தொடர்ந்து சுங்கம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கோவை மாவட்டத்தில் சுங்கம் டெப்போவை தவிர உக்கடம், மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி உள்பட பல்வேறு டெப்போக்களில் இருந்து பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தொழிற்சங்க நிர்வாகிகள் போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் நேற்று மதியம் முதல் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக இயக்குனர் கோவிந்தராஜ் மற்றும் பொதுமேலாளர் அன்பு ஆபிரகாம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இரவு 11 மணி வரை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

இதுகுறித்து தொழிற்சங்க பிரமுகர் அருணகிரி கூறும்போது, ‘பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது, வருகிற 24–ந்தேதி ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும், தற்காலிக பணியாளர்கள் 60 பேரை நிரந்தரம் செய்து அதற்கான ஆணை வழங்கப்படும் என்றும், நிர்வாக குறைபாடுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றும் அதிகாரிகள் உறுதிமொழி அளித்தனர். இதனை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. திங்கட்கிழமை(இன்று) முதல் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story