வரதட்சணை கொடுமையால் நிறைமாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை கணவர் கைது


வரதட்சணை கொடுமையால் நிறைமாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை கணவர் கைது
x
தினத்தந்தி 20 March 2017 12:59 AM IST (Updated: 20 March 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே வரதட்சணை கொடுமையால் நிறைமாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு,

பெங்களூரு அருகே வரதட்சணை கொடுமையால் நிறைமாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது கணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நிறைமாத கர்ப்பிணி

பெங்களூரு புறநகர் ஆவலஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பூதிகெரேயில் வசித்து வருபவர் மகேஷ். இவரது மனைவி வரலட்சுமி (வயது 24). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. தற்போது வரலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். மேலும் இன்னும் சில நாட்களில் அவருக்கு குழந்தை பிறக்கலாம் என்று டாக்டர்கள் கூறி இருந்தார்கள். இதற்கிடையே, வரலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு மகேஷ் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டையும் ஏற்பட்டது. இந்த நிலையில், குழந்தை பிறக்கும் முன்பாக வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி வரலட்சுமிக்கு மகேஷ் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த வரலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

கணவர் கைது

இதுபற்றி அறிந்ததும் வரலட்சுமியின் பெற்றோர் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்கள். இந்த நிலையில், ஆவலஹள்ளி போலீஸ் நிலையத்தில் வரலட்சுமியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். அதில், தங்களது மகளிடம் வரதட்சணை கேட்டு மகேஷ் கொடுமைப்படுத்தியதுடன், அவரை கொலை செய்திருப்பதாகவும் கூறி இருந்தார்கள்.

இதையடுத்து, ஆவலஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தார்கள். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஆவலஹள்ளியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story