தலைமை தேர்தல் அதிகாரியிடம் பா.ஜனதா மனு அரசு அதிகாரிகள் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார்
தலைமை தேர்தல் அதிகாரியிடம் பா.ஜனதா மனு கொடுத்துள்ளது. அரசு அதிகாரிகள் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு,
தலைமை தேர்தல் அதிகாரியிடம் பா.ஜனதா மனு கொடுத்துள்ளது. அரசு அதிகாரிகள் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் கூறப்பட்டுள்ளது.
காங்கிரசுக்கு ஆதரவாக...கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை ஆகிய தொகுதிகளில் ஏப்ரல் 9–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பே அந்த தொகுதிகளில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி அனில்குமார் ஜாவிடம் நேற்று ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:–
உணவு மற்றும் பொது வினியோகத்துறை துணை இயக்குனர் ரமேஷ்வரப்பா, பொது வழிகாட்டுதல் துறை துணை இயக்குனர் பசப்பா, மாவட்ட பஞ்சாயத்து உதவி செயற்பொறியாளர் சிவமாதையா, தாலுகா பஞ்சாயத்து செயல் அதிகாரி ரேவண்ணா ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். அவர்கள் அக்கட்சியின் ஏஜெண்டுகளை போல் பணியாற்றுகிறார்கள்.
4 அதிகாரிகள் பணி இடமாற்றம்அரசு அதிகாரிகள் என்பதை மறந்து அவர்கள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள். தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டும். இதற்காக அந்த 4 அதிகாரிகளையும் பணி இடமாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.