டாஸ்மாக் கடை சுவரில் துளைப்போட்டு பணம், மது பாட்டில்கள் திருட்டு


டாஸ்மாக் கடை சுவரில் துளைப்போட்டு பணம், மது பாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 20 March 2017 3:15 AM IST (Updated: 20 March 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளைப்போட்டு பணம், மது பாட்டில்கள் திருடப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தை சேர்ந்த அருண் (வயது 43) என்பவர் பணியாற்றி வருகிறார். விற்பனையாளராக தொழுவூர் நாகராஜபுரத்தை சேர்ந்த ரகு (36), புட்லூர் ராமாபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் (41), திருநின்றவூரை சேர்ந்த கண்ணன் (40), திருவள்ளூர் காந்திபுரத்தை சேர்ந்த கண்ணன் (40) ஆகியோர் இருந்தனர். நேற்று முன்தினம் ரகு, ராஜ்குமார் இருவரும் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் இரவு அவர்கள் இருவரும் ரூ.3 ஆயிரத்து 800– ஐ கல்லாப்பெட்டியில் வைத்து விட்டு ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 500 ஐ எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றனர். டாஸ்மாக் கடை அருகே பார் உள்ளது. பாரில் வேலை பார்க்கும் ஊழியர் நேற்று காலை டாஸ்மாக் கடை பின்புறமாக சென்றார். அப்போது டாஸ்மாக் கடையின் பின்புற சுவரில் துளையிடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பணம், மதுபாட்டில்கள் திருட்டு

உடனடியாக அவர் இது குறித்து போலீசாருக்கும், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளருக்கும் தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சுவர் துளையிடப்பட்டதில் சுவருக்கு பின்னால் வைக்கப்பட்டிருந்த 80 மது பாட்டில்கள் சேதம் அடைந்திருப்பது தெரிய வந்தது. மேலும் கடையில் இருந்த ரூ.3 ஆயிரத்து 800 மற்றும் 90 மது பாட்டில்கள் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகைகளையும் பதிவு செய்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story