ரே‌ஷன் கடையில் மண்எண்ணெய் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


ரே‌ஷன் கடையில் மண்எண்ணெய் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 March 2017 4:30 AM IST (Updated: 20 March 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி அருகே ரே‌ஷன் கடையில் மண்எண்ணெய் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி 7–வது வார்டுக்கு உட்பட்ட பகுதி அண்ணா நகர். இங்கு 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கான ரே‌ஷன் கடை அங்குள்ள குமரேசன் வீதியில் உள்ளது. மண்எண்ணெய் வாங்குவதற்காக அண்ணா நகரை சேர்ந்த பொதுமக்கள் ரே‌ஷன் கடைக்கு நேற்று காலை 8.30 மணிக்கு சென்று உள்ளனர். ஆனால் ரே‌ஷன் கடையில் மண்எண்ணெய் இல்லை என்று அங்கிருந்த ஊழியர்கள் கூறியுள்ளனர். எப்போது வந்து கேட்டாலும் மண்எண்ணெய் இல்லை என்று சொல்கிறீர்களே என ரே‌ஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து ரே‌ஷன் கடையில் இருந்து பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அங்குள்ள கோவை–சத்தி ரோட்டுக்கு 9 மணி அளவில் வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதனால் கோவை–சத்தி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் வட்ட வழங்கல் அதிகாரி தங்கவேல், புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த 6 மாதங்களாக எங்களுக்கு மண்எண்ணெய் உள்பட எந்தவித ரே‌ஷன் பொருட்களும் முறையாக கிடைப்பதில்லை. நாங்கள் அனைவரும் ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர்கள். ரே‌ஷன் பொருட்கள் சரியாக கிடைக்காததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு உடனடியாக மண்எண்ணெய் வழங்க வேண்டும். மேலும் அனைத்து ரே‌ஷன் பொருட்களும் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் வட்ட வழங்கல் அதிகாரி தங்கவேல் கூறுகையில், ‘ரே‌ஷன் கடையில் பொருட்கள் முறையாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு 9.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story