அ.தி.மு.க கட்சி சின்னாபின்னமாகிக் கொண்டு இருப்பதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு
அ.தி.மு.க. கட்சி சின்னாபின்னமாகிக் கொண்டு இருப்பதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
திருப்பூர்,
அ.தி.மு.க. கட்சி சின்னாபின்னமாகிக் கொண்டு இருப்பதால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். மாநில பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கண்டிப்பது ஏன்?தமிழக அரசியலில் ஒரு மாற்றம் வரவேண்டும் என்று மக்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு பாரதீய ஜனதா கட்சி உறுதுணையாக இருக்கும்.
உத்தரபிரதேச மாநிலத்தின் தற்போதைய முதல்–மந்திரி, அங்குள்ள மக்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு தமிழகத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் எதற்காக கண்டன குரல்கள் எழுப்புகிறார்கள் என்று தெரியவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்–மந்திரி ஏற்கனவே அரசியலில் இருந்தவர். மதவாதம் பரப்பப்படுவதாக இங்குள்ள கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் கண்டன குரல் எழுப்ப என்ன காரணம்?. அவரவர் அரசியலை ஒழுங்காக பாருங்கள்.
இரட்டை இலை சின்னம் முடக்க வாய்ப்புஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது. கங்கை அமரன் பொது வேட்பாளராகவே பார்க்கப்படுகிறார். அடித்தட்டு மக்களில் இருந்து வந்தவர் அவர். அனைத்து தரப்பு மக்களுக்கும் அங்கீகாரம் கொடுக்கும் கட்சியாக பாரதீய ஜனதா கட்சி உள்ளது. வெற்றி பெற செய்வது வரை அனைத்து தொண்டர்களும் பணியாற்றுவார்கள்.
இரட்டை இலை தற்போது மோடியின் கையில் இருக்கிறது என்று காங்கிரஸ் கமிட்டியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கூறுகிறார். அடிப்படை அரசியல் தெரியாத தலைவராக இருக்கிறார். அவரின் அறியாமையைத்தான் இதுகாட்டுகிறது.
அ.தி.மு.க. கட்சி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறது. இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அரசியல் ரீதியாக என்ன நடக்க இருக்கிறதோ அது நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.