ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இன்றும், நாளையும் காத்திருப்பு போராட்டம்


ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இன்றும், நாளையும் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 20 March 2017 4:30 AM IST (Updated: 20 March 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருச்சி,

ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவித்தபடி கால முறை ஊதியம் வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 14-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது தொடர்பாக மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில செயலாளர் பழனியப்பன் மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அடுத்த கட்ட போராட்டம் குறித்து மாநில தலைவர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காத்திருப்பு போராட்டம்

ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவித்தபடி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றோம். தொடர்ந்து இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதற்குள் தமிழக அரசு அதிகாரிகளும், முதல்-அமைச்சரும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும்.

இல்லையெனில் சென்னையில் வருகிற 22-ந் தேதி ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலாளர்கள் பணிக்கு செல்லாததால் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி பாதிப்படைந்துள்ளது.

குடிநீர் வினியோகம் பாதிப்பு

மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று(திங்கட்கிழமை) முதல் கலந்து கொள்கின்றனர். இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும். ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாட்டால் சிரமம் அடைந்து வரும் பொதுமக்களுக்கு இந்த போராட்டத்தால் கூடுதல் சிரமம் ஏற்படும். இதற்காக நாங்கள் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். துப்புரவு பணியாளர்களும் ஆதரவு தெரிவித்து இன்றைய போராட்டத்தில் பங்கேற்கின்றனர். தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டப்பணிகள் பாதிப்படைந்துள்ளது. தொழிலாளர்களுக்கு ஊதியம் கணக்கிட்டு வழங்கப்படவில்லை. பணி ஒதுக்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்களும் போராட்டத்தில் குதிக்கின்றனர். எனவே தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊரக வளர்ச்சி பணியாளர்கள்

இதற்கிடையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினரின் போராட்டத்திற்கு ஊரக வளர்ச்சி பணியாளர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்து அச்சங்கத்தின் மாநில பொது செயலாளர் முத்துராமன் திருச்சியில் நிருபர்களிடம் கூறுகையில், “ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர், உயர் அதிகாரிகளை நாளை(அதாவது இன்று) சந்தித்து பேசப்படும். 22-ந்தேதி சென்னையில் நடைபெறும் முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்போம்” என்றார்.


Next Story