மழை வேண்டி காவிரி ஆற்றில் வருணஜெபம் காஞ்சி சங்கராச்சாரியார்கள் தொடங்கி வைக்கின்றனர்


மழை வேண்டி காவிரி ஆற்றில் வருணஜெபம் காஞ்சி சங்கராச்சாரியார்கள் தொடங்கி வைக்கின்றனர்
x
தினத்தந்தி 20 March 2017 4:15 AM IST (Updated: 20 March 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

மழை வேண்டி திருவையாறு காவிரி ஆற்றில் வருணஜெபம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைக்கின்றனர்.

திருவையாறு,

வருகிற செப்டம்பர் மாதம் 12–ந் தேதி குருபகவான் கன்னிராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். 2018–ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவர் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

பிரம்மாவின் கமண்டலத்தில் 3½ கோடி தீர்த்தங்களுக்கும் அதிபதியான புஷ்கரன் இருக்கிறார். பிரகஸ்பதியான குரு பகவான் நவக்கிரகங்களுக்கு அதிபதியாக வேண்டும் என்று விரும்பி பிரம்மாவிடம் வரம் கேட்டு வாங்கினார். பின்னர் அவர் பிரம்மாவிடம் இருக்கும் புஷ்கரத்தை (கமண்டலம்) வழங்கும் படி கேட்டுக்கொண்டார்.

அவரும் அதை வழங்க தயாரானார். ஆனால் பிரம்மாவை விட்டு பிரியமாட்டேன் என்று புஷ்கரன் கூறி, குருவுடன் செல்ல மறுத்துவிட்டார். உடனே பிரம்மா, புஷ்கரனிடம் குரு பகவான், ஒவ்வொரு ராசியில் பிரவேசிக்கும் போது குறிப்பிட்ட காலம் அந்த ராசியில் இருக்க வேண்டும். முக்கியமாக குருப்பெயர்ச்சியின் போது முதல் 12 நாட்களும், வருட முடிவில் 12 நாட்களும் இருக்க வேண்டும் என்றார்.

அதன்படி குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்கும் போது ஒவ்வொரு நதியிலும் புஷ்கரன் ஐக்கியமாவதாக ஐதீகம். அப்போது 3½ கோடி தீர்த்தங்களும் அந்த நதியில் அரூவ நிலையில் இருக்கும்.

துலாம் ராசி


குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்கும் போது எந்த நதியில் புஷ்கரன் இருக்கிறார் என்று புராண நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 12–ந் தேதி குருப்பெயர்ச்சியின் போது புஷ்கரன் துலாம் ராசிக்குரிய காவிரி நதியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அன்று காவிரியில் நீராடினால் பாவங்கள், தோ‌ஷங்கள் நீங்கும். வேண்டியவை கிடைக்கும். மோட்ச நிலை கிட்டும்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காவிரி புஷ்கர விழா வருகிற செப்டம்பர் மாதம் 12–ந் தேதி முதல் 24–ந் தேதி வரை நடைபெறுகிறது. அன்று முக்கிய தலமாக கருதப்படும் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நீராடுவது விசே‌ஷம்.

வருணஜெபம்


காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், மழைக்காக பதிகம் பாடப்பெற்றதும், அப்பருக்கு சிவபெருமான் கயிலைக்காட்சி கொடுத்த தென் கயிலாயமான திருவையாறு காவிரி ஆற்றில் புஷ்யபடித்துறையில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு வருணஜெபம், விராட பருவம் வாசித்தல், பர்ஜன்ய சாந்தி ஜெபம் தொடங்குகிறது.

இந்த நிகழ்ச்சியை காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஆதீன கர்த்தர்கள் தொடங்கி வைக்கின்றனர். பின்னர் காஞ்சி சங்கராச்சாரியார்கள் திருவையாறு, பாபாசாமி அக்ரஹாரம் அண்ணாசாமி பாகவதர் இல்லத்தில் அமைந்துள்ள சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோவிலுக்கு செல்கின்றனர். 22–ந் தேதி காலை வரை திருவையாறு காவிரி ஆற்றில், காவிரி ஊற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வருண ஜெபம் நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கிறது.


Next Story