செங்குன்றம் அருகே குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு


செங்குன்றம் அருகே குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 20 March 2017 4:15 AM IST (Updated: 20 March 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு

செங்குன்றம்,

செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில் அம்பேத்கர் நகர், பெருமாளடிபாதம், நாகத்தம்மன் நகர், எம்.ஜி.ஆர். நகர், டாக்டர் சிவந்தி ஆதித்தன் நகர், சோலையம்மன் நகர் உள்பட 40–க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த ஊராட்சியில் உரிமம் பெற்றும், உரிமம் பெறாமலும் என 40–க்கும் மேற்பட்ட தனியார் கம்பெனிகள் 300 அடி ஆழத்தில் ராட்சத மின்மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஊராட்சி சார்பில் சுமார் 150 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு தண்ணீர் கிடைக்காததால் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது.

வீடுகளில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. கோடை காலம் என்பதால் ஊராட்சி மன்றம் சார்பாக காலையில் 1 மணி நேரம் வழங்கப்பட்டு வந்த தண்ணீர், தற்போது அரை மணிநேரம் கூட வருவதில்லை என தெரிகிறது.

இதனால் இப்பகுதி மக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். குடிநீரை தேடி காலி குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து ஒன்றிய அதிகாரியிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story