வேளச்சேரியில் கிணற்றை தூர்வாரக்கோரி நூதன போராட்டம்
பாழடைந்து காணப்படும் கிணற்றை தூர்வாரக்கோரி நூதன போராட்டம்
ஆலந்தூர்
சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் தரைமட்ட பொது கிணறு ஒன்று உள்ளது. பல ஆண்டுகளாக அந்த கிணற்றை தூர்வாரி பராமரிக்காததால் தற்போது தண்ணீர் இன்றி பாழடைந்து காணப்படுகிறது. மேலும் அந்த கிணற்றில் குப்பைகள் கொட்டப்படுவதால் குப்பைகளால் நிரம்பி கிணறே மூடப்படும் நிலையில் உள்ளது.
கோடை காலத்தில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் இந்த கிணற்றை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் தமிழ்நாடு ஏழை, எளியோர் நடுத்தர மக்கள் நலச் சங்கத்தின் சார்பில், கிணற்றை தூர்வாராத சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக தூர்வாரக்கோரியும் நேற்று பாழடைந்த கிணற்றுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டம் நடத்தப்பட்டது.
சங்க தலைவர் லிங்கபெருமாள் தலைமையில் அந்த பகுதி பொதுமக்கள் கையில் காலி குடங்கள், வாளியுடன் வந்து கிணற்றுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள், குடிநீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாழடைந்த கிணற்றை தூர்வார வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.