ராணி பூங்காவில் பென்குயின்களை காண மக்கள் கூட்டம் அலைமோதியது ஒரே நாளில் 25 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர்
பென்குயின்களை காண ராணி பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் சுமார் 25 ஆயிரம் பேர் பென்குயின்களை பார்த்து ரசித்தனர்.
மும்பை,
பென்குயின்களை காண ராணி பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் சுமார் 25 ஆயிரம் பேர் பென்குயின்களை பார்த்து ரசித்தனர்.
பென்குயின்கள்மும்பை, பைகுல்லாவில் பழமையான ராணி பூங்கா உள்ளது. இங்கு வைப்பதற்காக 8 பென்குயின் பறவைகள் தென்கொரியாவில் உள்ள சியோலில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பை கொண்டு வரப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் இந்த பென்குயின்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக ஒரு பென்குயின் உயிரிழந்தது. இதையடுத்து பென்குயின்களை பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் கடந்த 6–ந்தேதி பென்குயின்கள் ராணி பூங்காவில் அவைகளுக்காக பிரத்யேகமாக 1,550 சதுர அடியில் வடிவமைக்கப்பட்ட வாழ்விடத்திற்கு கொண்டு வரப்பட்டன. இந்த வாழ்விடத்தை பொதுமக்களின் பார்வைக்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே திறந்து வைத்தார்.
நேற்று முன்தினம் முதல் பொதுமக்கள் பென்குயின்களை இலவசமாக காண அனுமதிக்கப்பட்டனர். இதில், நேற்று முன்தினம் மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் பென்குயின்களை நீண்ட வரிசையில் காத்து நின்று பார்த்தனர்.
பார்த்து ரசித்தனர்இந்தநிலையில் நேற்று காலை முதலே பென்குயின்களை காண பொதுமக்கள் ராணி பூங்காவிற்கு படையெடுத்தனர். இதனால் ராணி பூங்கா மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் பூங்காவிற்குள் நீண்ட வரிசையில் நின்றனர். மணிக்கணக்கில் காத்து நின்று பொதுமக்கள் பென்குயின்களை பார்த்து ரசித்தனர். சிறுவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இதுகுறித்து காட்கோபரை சேர்ந்த சிறுவன் ஒருவன் கூறும்போது, ‘டி.வி.யில் மட்டுமே பார்த்து வந்த பென்குயின்களை நேரில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்றான்.
2 மணிநேரம் காத்திருந்தேன்இந்தநிலையில் நேரம் ஆக ஆக பென்குயின்களை பார்க்க வந்த பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பென்குயின் வாழ்விட மைய சுற்றுச்சுவர் கதவு மூடப்பட்டது. பின்னர் 10, 20 பேராக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து பெண் ஒருவர் கூறுகையில், ‘பென்குயின்களை பார்க்கவேண்டும் என்ற ஆசையில் காலையிலேயே இங்கு வந்தோம். ஆனால் எங்களுக்கு முன்பே இங்கு மக்கள் நீண்டவரிசையில் காத்து நின்றனர். அதனால் சுமார் 2 மணிநேரம் காத்திருந்த பிறகே பென்குயின்களை பார்க்க முடிந்தது. 1 நிமிடம் கூட பென்குயின்களை நின்று பார்க்க பூங்கா ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. பென்குயின்களை பார்த்து ரசிக்க கூடுதல் நேரம் கொடுக்கலாம்’ என்றார்.
குடிநீர் வசதி வேண்டும்செம்பூர் பகுதியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ‘‘பூங்காவிற்குள் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. ஆனால் பென்குயின்கள் வாழ்விட பகுதியில் குடிநீர் வசதியில்லை. வரிசையில் காத்து நிற்பதால் பூங்காவின் பிற பகுதிக்கு சென்று தண்ணீர் குடிக்க முடியவில்லை. தண்ணீர் குடிக்க சென்றால் மீண்டும் வரிசையில் பின்னால் நிற்கவேண்டும். தாகத்தையும் அடக்க முடியவில்லை. கஷ்டமாக இருந்தது.
எனவே அதிகாரிகள் பொதுமக்கள் வரிசையில் நிற்கும் இடங்களில் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்’’ என்றார்.
25 ஆயிரம் பேர்...பென்குயின்களை பார்க்க பொதுமக்கள் மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் நீண்டநேரம் வரிசையில் நின்றும் பலர் பென்குயின்களை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். சிலர் பூங்கா ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாலை 5 மணி வரை பென்குயின்களை பார்க்க அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 25 ஆயிரம் பேர் பென்குயின்களை பார்த்து ரசித்ததாகவும், இனி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பென்குயின்களை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.