கொடைக்கானல் வனப்பகுதியில் மான் வேட்டை; 2 பேர் கைது


கொடைக்கானல் வனப்பகுதியில் மான் வேட்டை; 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 March 2017 4:00 AM IST (Updated: 20 March 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் வனப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு மானை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள அடுக்கம் பகுதியில் மர்ம நபர்கள் விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து சோதனை நடத்த மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவு பிறப்பித்தார்.

அதன் பேரில், தேவதானப்பட்டி வனச்சரகர் (பொறுப்பு) கருப்பையா, வனவர் ரெங்கநாதன் தலைமையிலான வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் செழும்புசராகம் என்ற இடத்தில் உள்ள சோதனை சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் சாக்கு மூட்டையையும் வைத்திருந்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவர்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, அந்த சாக்கு மூட்டையில் இறந்த நிலையில் சருகுமான் இருந்தது. மேலும், நாட்டுத்துப்பாக்கி, தோட்டா, அரிவாள், கத்தி, டார்ச் போன்றவை இருந்தன.

துப்பாக்கியால் சுட்டு வேட்டை

வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த குணசேகரன், நாகராஜன் என்பதும், சருகுமானை வேட்டையாடியதும் தெரியவந்தது. அவர்கள், வேட்டையாடிய மானின் தோலை உறித்து, உடலை தீயில் வாட்டி இருந்தனர். அவர்களிடம் இருந்து மானின் உடல், துப்பாக்கி, கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், அவர்களை கைது செய்தனர். பிறகு, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், கைதான 2 பேருக்கும் துப்பாக்கி கிடைத்தது எப்படி? அவர்களுக்கு வேறு ஏதேனும் சம்பவங்களில் தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றி வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story