தாண்டிக்குடி–கூடம்நகர் இடையே கரடு முரடான சாலை சீரமைக்கப்படுமா?


தாண்டிக்குடி–கூடம்நகர் இடையே கரடு முரடான சாலை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 20 March 2017 3:45 AM IST (Updated: 20 March 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

தாண்டிக்குடி– கூடம்நகர் இடையே கரடு, முரடான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரும்பாறை

கொடைக்கானல் தாலுகா தாண்டிக்குடி ஊராட்சியில் கூடம்நகர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 50–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு செல்வதற்கு தாண்டிக்குடி மண்டல காபி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பாலமுருகன் கோவில் வழியாக சுமார் 7 கிலோமீட்டர் தூரம் சாலை உள்ளது.

தற்போது இந்த சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளம் ஏற்பட்ட இடங்களில் பெரிய கற்களை போட்டு நிரப்பியுள்ளனர். அதில், வாகனங்கள் செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையின் இருபுறத்திலும் முள்செடி, கொடிகள் அடர்ந்துள்ளன.

சீரமைக்க கோரிக்கை

கரடு, முரடான சாலையையே அந்த பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சிதறி கிடக்கும் கற்கள் பொதுமக்களின் கால்களை பதம் பார்க்கின்றன. பொதுமக்கள் தடுமாறி விழுந்து காயம் அடையும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

எனவே சேதம் அடைந்த நிலையில் உள்ள தாண்டிக்குடி–கூடம்நகர் சாலையை சீரமைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story