விஷம் கலந்த நெல்லை தின்ற 30 மயில்கள் சாவு வனத்துறையினர் விசாரணை
வானூர் அருகே விஷம் கலந்த நெல்லை தின்ற 30 மயில்கள் இறந்துகிடந்தன. இதுபற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் வானூர், ஆரோவில், ரங்கநாதபுரம், தொள்ளாமூர், கொண்டலாம்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான மயில்கள் உள்ளன. இவை கூட்டம் கூட்டமாக அந்த பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் மேய்வதால் விவசாய பயிர்களான நெல், மணிலா, உளுந்து போன்றவை சேதப்படுத்தப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் வானூர் தாலுகா கொண்டலாம்குப்பம் – தொள்ளாமூர் சாலையோரம் உள்ள விவசாய நிலங்களில் 30–க்கும் மேற்பட்ட மயில்கள் நேற்று காலை இறந்து கிடந்தன. இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வானூர் போலீஸ் நிலையத்துக்கும், திண்டிவனம் வனத்துறை அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விஷம் கலந்த நெல்அதன்பேரில் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இறந்து கிடந்த மயில்களை கைப்பற்றினர். விஷம் கலந்த தானியங்களை தின்று இறந்ததா? அல்லது பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த விவசாய பயிர்களை தின்று இறந்ததா? என்று விசாரணை மேற்கொண்டனர்.
தகவல் அறிந்து வந்த வானூர் கால்நடை மருத்துவர் புருஷோத்தமன், மயில்களுக்கு பிரேத பரிசோதனை செய்தார். அப்போது விஷம் கலந்த நெல்லை தின்றதால் மயில்கள் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே விவசாய பயிர்களை சேதப்படுத்தியதால் விஷம் கலந்த நெல்லை தூவி மயில்களை யாரோ கொன்றது தெரியவந்தது.
வனத்துறையினர் விசாரணைஎனவே விஷம் கலந்த நெல்லை தூவிய விவசாயி யார்? என்று வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே இடத்தில் நாட்டின் தேசிய பறவையான மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.