தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தம் நோயாளிகள் அவதி


தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தம் நோயாளிகள் அவதி
x
தினத்தந்தி 20 March 2017 3:47 AM IST (Updated: 20 March 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

பயிற்சி டாக்டர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மும்பை மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

மும்பை,

பயிற்சி டாக்டர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மும்பை மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

பெண் நோயாளி உயிரிழப்பு

மராட்டியத்தில் நோயாளிகளின் உறவினர்களால் டாக்டர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அண்மையில் துலேயில் பயிற்சி டாக்டர் ஒருவரும், நாசிக்கில் டாக்டர், நர்சு ஆகியோர் உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்களால் தாக்கப்பட்டனர். இந்த சம்பவங்கள் டாக்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தநிலையில், மும்பை சயான் மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது.

சிறுநீரக செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட ரேகா சிங் என்ற 60 வயது பெண் நேற்றுமுன்தினம் சயான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு டாக்டர்கள் டயாலிசிஸ் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் இரவு அவரது உடல் நிலை மோசமாகி உயிரிழந்தார்.

தாக்குதல்-வேலைநிறுத்தம்

இதுபற்றி அவரது உறவினர்களிடம் பயிற்சி டாக்டர் ரோகித் குமார் என்பவர் தெரிவித்து இருக்கிறார். இதைக்கேட்டு கோபம் அடைந்த அவர்கள் ரோகித் குமாரை பிடித்து சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். இதுபற்றி அறிந்ததும் பயிற்சி டாக்டரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் அங்கு திரண்டனர். மேலும் நேற்று மாலை முதல் அந்த ஆஸ்பத்திரி பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

இதேபோல நாயர் மற்றும் கே.இ.எம். ஆஸ்பத்திரி பயிற்சி டாக்டர்களும் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனால் நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

Next Story