போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்மச்சாவு தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்


போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்மச்சாவு தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 20 March 2017 3:58 AM IST (Updated: 20 March 2017 3:57 AM IST)
t-max-icont-min-icon

பால்கரில் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்மமான முறையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.

வசாய்,

பால்கரில் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்மமான முறையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.

காதல் ஜோடிக்கு உதவி

பால்கரை அடுத்த லோக்மான்யாபாடாவை சேர்ந்த வாலிபர் ஆஷிஸ் கட்டேலா(வயது21). இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு காதல் ஜோடியை அவர்களது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி சேர்த்து வைக்கும் நோக்கத்தில் அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு உதவி செய்து இருக்கிறார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் பால்கர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அன்றைய தினம் இரவு ஆஷிஸ் கட்டேலாவை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின் அவர் விடுவிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வாலிபர் மர்மச்சாவு

இந்தநிலையில், மறுநாள் ஆஷிஸ் கட்டேலா அங்குள்ள தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் ரெயிலில் அடிபட்ட நிலையில் சிதைந்து இருந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த ஆஷிஸ் கட்டேலாவின் பெற்றோர் அவரது உடலை வாங்க மறுத்து போலீஸ் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பால்கர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாரதா ராவுத் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

விசாரணை

அப்போது ஆஷிஸ் கட்டேலாவின் பெற்றோர், போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தங்களது மகன் எப்படி ரெயிலில் அடிபட்டு இறந்திருக்க முடியும். இதற்கு போலீசார் தான் முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும். இது தொடர்பாக சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்ததின் பேரில் அவர்கள், ஆஷிஸ் கட்டேலாவின் உடலை வாங்க சம்மதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story