பள்ளி அருகில் உள்ள கடைகளில் சோதனை: ரூ.10½ லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
பள்ளி அருகில் உள்ள கடைகளில் சோதனை: ரூ.10½ லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல், 7 பேர் கைது
புதுச்சேரி,
புதுவையில் பள்ளிக்கூடங்கள் அருகிலும் மற்ற இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கடைகளில் இருந்து ரூ.10½ லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
புகையிலைப் பொருட்கள்புதுச்சேரியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல இடங்களில் தடையை மீறி குட்கா, பான் மசாலா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
பள்ளிக்கூடங்கள் அருகில் உள்ள கடைகளிலும் இத்தகைய பொருட்கள் தடையின்றி கிடைக்கின்றன. இதை தடுக்கும் விதமாக வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரக்ஷனாசிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், தனசேகரன், தங்கமணி, சப்–இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், குமார், கலையரசன், வீரபுத்திரன், தயாளன், பிரதாபன் மற்றும் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஏராளமான புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கடைகளில் இருந்து வியாபாரிகளிடம் விசாரித்தபோது புதுவை ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள ஒரு கடையில் இருந்து வாங்கி புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள கடை மற்றும் குடோனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மொத்த விற்பனையாளர்அப்போது அங்கு பெருமளவில் புகையிலைப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்ததை பார்த்தனர். இதைத்தொடர்ந்து அவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கான மொத்த விற்பனையாளரான கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த அமீர் அம்சா (வயது 61) என்பவரையும் கைது செய்தனர்.
பெரியகடை பகுதியில் ஆய்வு நடத்திய இந்த குழுவினர் ரத்ன ஜெயசங்கர் என்பவரை கைது செய்து அவரது கடையில் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை கைப்பற்றினர்.
7 பேர் கைதுதடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக போலீசார் 6 வழக்குகள் பதிவு செய்தனர். இதுதொடர்பாக ஒட்டுமொத்த விற்பனையாளர், சிறிய வியாபாரிகள் என 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் என்று போலீசார் தெரிவித்தனர்.