காங்கிரஸ் தலைமை பொறுப்பை ராகுல்காந்தி ஏற்க வேண்டும் நாராயணசாமி விருப்பம்


காங்கிரஸ் தலைமை பொறுப்பை ராகுல்காந்தி ஏற்க வேண்டும் நாராயணசாமி விருப்பம்
x
தினத்தந்தி 20 March 2017 4:30 AM IST (Updated: 20 March 2017 4:34 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பினை ராகுல்காந்தி ஏற்கவேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பினை ராகுல்காந்தி ஏற்கவேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஆச்சரியமான முடிவுகள்

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் ஆச்சரியமான முடிவுகள் வந்துள்ளன. அங்கு காங்கிரஸ்– சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஈடுபட்டனர். இவர்கள் பங்கேற்ற கூட்டங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

வாரணாசி தொகுதியில் பிரதமர் வாக்குசேகரித்தபோது கூடிய கூட்டத்தைவிட கூடுதலாக எங்கள் கூட்டணி கூட்டங்களில் மக்கள் அதிக அளவு கூடினார்கள். அதனாலேயே பிரதமர் நரேந்திரமோடி கூட தனது சொந்த தொகுதியான வாரணாசி தொகுதியில் 2 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

படிப்பினை தந்த தேர்தல்

உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து மாயாவதி சந்தேகங்களை எழுப்பியுள்ளார். இது சர்ச்சைக்குரிய வி‌ஷயமாக மாறியுள்ளது.

மணிப்பூர், கோவாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆனால் அதிகாரத்தை பயன்படுத்தி மணிப்பூர், கோவாவில் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக பாரதீய ஜனதா ஆட்சியமைத்தது. அங்கு கவர்னர்கள் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். இது மிகவும் வருந்தத்தக்கது.

ஜனநாயகப்படி கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றவர்களைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். ஆனால் இப்போது ஜனநாயகம் கேள்விக்குறியதாகி உள்ளது. உத்தரப்பிரதேச தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு படிப்பினையை ஊட்டியுள்ளது. தேர்தல்யுத்தி தொடர்பாக தலைவர்கள் அமர்ந்துபேசி முடிவு எடுக்கவேண்டும்.

தலைமை பொறுப்பு

தேர்தல் பிரசாரத்தின்போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எல்லாம் பாரதீய ஜனதா அள்ளி வீசியது. மக்கள் அதை நம்பி விட்டார்கள். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது அரசியலில் சகஜம். நான்கூட 2014 பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தேன். இப்போது வெற்றி பெறவில்லையா? எனவே இந்த தோல்விக்கு ராகுல்காந்தியை மட்டும் காரணமாக கூறக்கூடாது. அவர் காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும். சோனியாகாந்தி சேர்மனாக இருந்து எப்போதும்போல் எங்களுக்கு ஆலோசனை வழங்கவேண்டும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

பேட்டியின்போது அமைச்சர் கந்தசாமி, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story