இயற்கை மிகுந்த புதுவையை பாதுகாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் கவர்னர் வேண்டுகோள்
இயற்கை மிகுந்த புதுவையை பாதுகாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்தார்.
வில்லியனூர்,
கவர்னர் கிரண்பெடி புதுவையில் இருக்கும் போது வாரந்தோறும் பல்வேறு இடங்களுக்குச் சென்று பொதுமக்கள் பயன்படுத்தி வரும் ஏரி, குளங்கள், குடியிருப்புகளை பார்வையிட்டு அங்கு காணப்படும் குறைகளை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். அதன்படி நேற்று காலை வில்லியனூரை அடுத்த ஊசுட்டேரிக்கு கிரண்பெடி வந்தார்.
அங்குள்ள வனப்பகுதியில் நடந்து சென்று பார்வையிட்டார். ‘பைனாகுலார்’ மூலம் பறவைகளை பார்த்து அவர் ரசித்தார். பிறகு ஏரி பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வன பாதுகாப்பு அலுவலர் குமார், வன அலுவலர் தியாகராஜன், வனத்துறை ஊழியர்கள், அரசு அதிகாரிகள் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள், கலாம் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:–
தண்ணீரை வீணாக்கக்கூடாதுமார்ச் 21, 22 ஆகிய தேதிகள் உலக வன நாள் மற்றும் உலக தண்ணீர் தினம் ஆகும். இனிமேல் ஆண்டுதோறும் இல்லாமல், தினந்தோறும் இந்த தினங்களை கொண்டாட வேண்டும். புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும், இயற்கை மிகுந்த பகுதியாக உள்ளது. இங்குள்ள காடுகளை பராமரிக்க வேண்டும். இதற்கு மாணவர்கள், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
சுத்தம் செய்ய வேண்டும்மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஊசுட்டேரி பகுதியை சுத்தமாக வைத்து இருக்க உதவ வேண்டும். மரக்கன்றுகள், மரங்களின் விதைகளை இந்த பகுதிகளில் நட வேண்டும். பள்ளி கல்லூரிகளில் உள்ள சுற்றுச்சூழல் சங்கம் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த ஏரிக்கு வந்து, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். உங்களுடன் வன அதிகாரிகளும் ஈடுபடுவார்கள்.
இதற்கான சுற்றறிக்கை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். அனைவரும் தொடர்ச்சியாக இந்த பணியில் ஈடுப்பட்டால் இந்த பகுதி மிகவும் சுத்தமாகவும் சுற்றுலாத் தலமாகவும் விளங்கும். தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க பழகிக்கொள்ள வேண்டும். இதுபற்றி உங்களை சுற்றியுள்ளவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வினாடி–வினா போட்டிநிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு வினாடி–வினா போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் தண்ணீரில் வளரும் மரங்கள், பறவைகளின் பெயர்கள், மாசு கட்டுப்பாடு சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.