ராணிப்பேட்டை சிப்காட்டில் டாஸ்மாக் கிடங்கை முற்றுகையிட்டு பொதுமக்கள் ‘திடீர்’ போராட்டம் புதிதாக கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தினர்
ராணிப்பேட்டை அருகே மதுக்கடை அமைப்பதை எதிர்த்து டாஸ்மாக் கிடங்கை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டையிலிருந்து லாலாபேட்டை வழியாக பொன்னை செல்லும் நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த கடையை மூடிவிட்டு அதனை கத்தாரிக்குப்பம் செல்லும் சாலையில் மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. இதனையொட்டி அங்கு கடைக்கான கட்டிடமும் கட்டப்பட்டு வருகிறது.
கடை தொடங்கப்படும் இடத்தின் அருகே பள்ளிக்கூடம் செயல்படுகிறது. மேலும் மெயின்ரோட்டிலிருந்து கத்தாரிக்குப்பத்திற்கு செல்லும் பிரதான சாலையாக இருப்பதால் அந்த வழியாக பெண்கள் செல்லும்போது மது குடிப்பவர்களால் பாதிப்பு ஏற்படும் என கிராம மக்கள் கருதினர்.
கிடங்கை முற்றுகைஇதனையடுத்து கத்தாரிக்குப்பம் சாலையில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி நேற்று சிப்காட் இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகே செயல்படும் டாஸ்மாக் கிடங்கை கத்தாரிக்குப்பம் கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு வாலாஜா ஒன்றிய விவசாயிகள் சங்க தலைவர் பாஸ்கரன், கத்தாரிக்குப்பம் ஊராட்சி முன்னாள் தலைவர் பாலு, முன்னாள் துணை தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
பின்னர் அவர்கள் டாஸ்மாக் கிடங்கு மேலாளர் அருண்குமாரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். இதனை உயர் அதிகாரிகள் பார்வைக்கு அனுப்பி வைப்பதாக அவர்களிடம் மேலாளர் தெரிவித்தார்.
பின்னர் அவர்கள் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு கோட்டாட்சியர் ராஜலட்சுமியை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.