ஆரணி அருகே சேவூரில் பஞ்சாலை தொழிலாளர்கள் தட்டு ஏந்தி பிச்சை கேட்கும் போராட்டம் 5–வது நாளாக நீடிப்பு
ஆரணி அருகே சேவூரில் உள்ள பஞ்சாலையில் சம்பள உயர்வு
ஆரணி,
ஆரணியை அடுத்த சேவூரில் பஞ்சாலை இயங்கி வருகிறது. இங்கு பஞ்சிலிருந்து நூல் தயாரிக்கப்பட்டு அவை வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஆலை 2 பிரிவுகளாக 3 ஷிப்டுகளாக இயங்குகிறது. 3 ஷிப்டிலும் 700–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்க்கின்றனர்.
இவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நிர்வாகம் ஊதிய உயர்வு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் இடையில் நின்ற தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு வந்தால் அவர்களுக்கு பழைய சலுகைகளையும் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கும் எந்த பதிலும் இல்லை.
பல மாதங்களாக இதே நிலை நீடித்துள்ளதால் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் கடந்த 16–ந் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஷிப்ட் வாரியாக வேலைக்கு சென்றாலும் அவர்கள் அங்கேயே உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தட்டுகளை ஏந்தி போராட்டம்வேலைநிறுத்தம் தொடங்கி நேற்றுடன் 5–வது நாள் ஆகிறது. 3–வது நாளின்போது தொழிலாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 5–வது நாளான நேற்று தொழிலாளர்கள் தங்களுக்கு சம்பள உயர்வு, விருப்ப ஓய்வுக்கு அனுமதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தட்டுகளை ஏந்தி பிச்சை கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் நிர்வாகம் தரப்பில் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை. தங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் தரப்பில் அறிவித்துள்ளனர்.