அரசு பணியில் இல்லாத முதியோருக்கு உதவித்தொகை வழங்கவேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை
அரசு பணியில் இல்லாத முதியோருக்கு நிபந்தனையில்லாமல் உதவித் தொகை வழங்கவேண்டும்.
தொண்டி,
கோரிக்கை மனு
திருவாடானையை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:– ராமநாதபுரம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையும், கடல் தொழிலையும் நம்பி வாழக்கூடிய கூலித்தொழிலாளார்களாகவே உள்ளனர். விவசாயமும், கடல் தொழிலும் கடந்த சில வருடமாக அதனை நம்பி வாழும் தொழிலாளிகளுக்கு பயன் அளிக்கவில்லை. இதனால் பல குடும்பங்கள் பிழைப்புக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் இடம் பெயர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம் வயது முதிர்ந்தவர்கள் தங்களின் மருத்துவ செலவுகளுக்கு கூட மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பட்டவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் தகுதியான முதியவர்களுக்கு உதவித்தொகை கிடைப்பதில்லை.
முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் செய்தால் பல்வேறு நிபந்தனைகளை சொல்லி அதிகாரிகள் அந்த மனுக்களை தள்ளுபடி செய்து விடுகின்றனர். எத்தனயோ குடும்பங்களில் ஆண் பிள்ளைகள் இருந்தும் வயதானவர்களை பராமரிக்க தவறி வருகின்றனர். நிலங்கள் இருந்தாலும் அதனை நம்பி வாழ்க்கையை நடத்த முடிவதில்லை. சொந்த வீடு இருந்தாலும் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அதனை விற்றுத்தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான முதியோர் சாப்பாட்டிற்கே வழியின்றி கோவில்களில் வழங்கப்படும் அன்னதானத்தில் உணவு அருந்தி தங்களது வாழ்நாளை கழித்து வருகின்றனர்.
உதவித்தொகைபெரும்பாலும் 60 வயதை அடையும் முதியோர் பல நோய்களுக்கு ஆளாகி வாழ்நாளின் எஞ்சிய நாட்களை நிரந்தர நோயாளிகளாகவே கடக்க வேண்டிஉள்ளது. இப்படிப்பட்ட முதியோருக்கு எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் முதியோர் உதவித்தொகை வழங்கினால் மருத்துவ செலவுகளுக்கும், தங்களின் வாழ்வாதார ஜீவனத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும். எனவே அரசு பணியில் இல்லாத 60 வயது பூர்த்தியடைந்த அனைத்து முதியோர்களுக்கும் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் மாதம் ரூ.1000 முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் சட்டம் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.