திருப்புல்லாணி அருகே கிணறு தோண்டும்போது மணல் சரிந்து தொழிலாளி பலி 3 மணி நேரம் போராடி உடல் மீட்பு


திருப்புல்லாணி அருகே கிணறு தோண்டும்போது மணல் சரிந்து தொழிலாளி பலி 3 மணி நேரம் போராடி உடல் மீட்பு
x
தினத்தந்தி 21 March 2017 4:45 AM IST (Updated: 20 March 2017 7:39 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கிணறு தோண்டும்போது மணல் சரிந்து தொழிலாளி பலியானார்.

ராமநாதபுரம்,

மணல் சரிந்து ஒருவர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ளது சண்முகவேல்பட்டினம். இந்த ஊரைச்சோந்த முனியசாமி என்பவருடைய மகன் குமார்(வயது38). மங்களூரில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய வீட்டின் பின்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கிணற்றில் வறட்சி காரணமாக தண்ணீர் இல்லாமல் போய்விட்டதாம். இதன்காரணமாக குமாரின் மனைவி தமிழ்மொழி கிணற்றினை தூர்வாரி ஆழப்படுத்த ஆட்களை ஏற்பாடு செய்தாராம்.

இதற்காக கிணறு தோண்டும் தொழிலாளர்கள் மொங்கான்வலசையை சேர்ந்த செல்வராஜ்(45), வேதகாரவலசையை சேர்ந்த வேலுச்சாமி(55), மொட்டிவலசையை சேர்ந்த முருகேசன்(39), காக்கையன்வலசை முத்து(56) ஆகியோர் கிணற்றை தூர்வாரி உறை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த பணியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த உறைகளில் சிலவற்றை எடுத்துவிட்டு மணலை அகற்றி ஆழப்படுத்தி மீண்டும் உறைகளை இறக்கி கொண்டிருந்தனர். முத்து மட்டும் மேலே நின்று கொண்டு உறைகளை இறக்க உதவி செய்து கொண்டிருந்தார். செல்வராஜ் உள்ளிட்ட மற்ற 3 பேரும் கிணற்றுக்குள் இறங்கி உறைகளை வாங்கி பொருத்திக் கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் பக்கவாட்டு பகுதியில் இருந்த மணல் திடீரென்று சரியத்தொடங்கியது. சில நிமிடங்களில் மணல் முழுவதுமாக சரிந்ததால் அதிர்ச்சியடைந்த வேலுச்சாமி, முருகேசன் ஆகியோர் சுதாரித்துக்கொண்டு மணல் குவியலை அகற்றிக்கொண்டு படுகாயங்களுடன் அவசரம் அவசரமாக மேலே ஏறி வந்துள்ளனர். ஆனால், செல்வராஜால் உடனடியாக மணல் குவியலை விளக்கிவிட்டு மேலே வரமுடியவில்லை.

மீட்பு பணி

இதன்காரணமாக மணல் முழுவதும் செல்வராஜ் மீது விழுந்தது. தொடர்ந்து சரசரவென பக்கவாட்டு மணல் முழுவதும் சுமார் 5 அடிக்கும் மேல் சரிந்து விழுந்தது. மணல் மூடியதை கண்ட மேலே இருந்தவர்கள் பதறி அடித்து கதறி அவரை மீட்க முயன்றனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை அலுவலர் முரளி, நிலைய அலுவலர் நாகராஜன் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்று செல்வராஜை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ராமநாதரபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராம்பிரதீபன் மேற்பார்வையில் வருவாய்த்துறை அதிகாரிகளும், திருப்புல்லாணி போலீசாரும் பணிகளை துரிதப்படுத்தினர். இந்த பகுதி குறுகலாக இருந்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஜே.சி.பி எந்திரம் கொண்டுவரப்பட்டு பக்கவாட்டு பகுதியில் குழி தோண்டி தீயணைப்பு வீரர்களின் பெரும் முயற்சிக்கு பின்னர் 3 மணி நேரம் கழித்து இறந்த நிலையில் செல்வராஜின் உடல் மீட்கப்பட்டது. பல அடி ஆழத்திற்கு மணல் மூடியதால் மூச்சுத்திணறி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு சுந்தரி என்ற மனைவியும் சபரிதாசன் என்ற மகனும், சுவேதா என்ற மகளும் உள்ளனர். பலியான செல்வராஜின் உடல் உடனடியாக ஆம்புலன்சில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், மணல் குவியலில் சிக்கி மீண்டு வந்த வேலுச்சாமி, முருகேசன் ஆகியோர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விசாரணை

திருப்புல்லாணி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இதுபோன்று கிணறுதோண்டும் போது மணல்சரிந்து விபத்துகள் நடந்து வருகிறது. கடற்கரையையொட்டி அமைந்துள்ள இந்த பகுதி மணல் சரியும் தன்மை கொண்டதாக இருப்பதால் இந்த பணியில் ஈடுபடுபவர்கள் முன்எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுஉள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்று பணியில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கிணறுதோண்டும்போது மணல்சரிவு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருப்புல்லாணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story