கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 21 March 2017 4:45 AM IST (Updated: 20 March 2017 7:46 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

கடலூர்,

ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் அருகே உள்ள கோ.ஆதனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக வந்தனர். மனுக்கள் பதிவு செய்யும் இடத்தின் அருகே நின்று கொண்டிருந்த அவர்கள் திடீரென தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அவர்களை ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி இல்லை என தெரிவித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் ராஜேசிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கோ.ஆதனூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமத்தில் என்.எல்.சி. நிர்வாகம் 2–வது சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம், வீடு மற்றும் மனைகளை கையகப்படுத்தி வருகிறது. இதில் சிலருக்கு இழப்பீட்டு தொகை கிடைத்தும், சிலருக்கு கிடைக்காமலும் உள்ள நிலையில் நேற்று முன்தினம் அனைவரும் வீடுகளை காலி செய்து தர வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். புதிய நில ஆர்ஜித மசோதாவின் படி இழப்பீடு தொகையும், மாற்று மனை ஒரே இடத்தில் வழங்குவதாக இருந்தால் நாங்கள் எங்கள் இடங்களை ஒப்படைக்க தயாராக இருக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

ஊரை விட்டு விலக்கி...

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி கொத்தட்டை கிராமத்தை சேர்ந்த சோழிய செட்டியார் சமுதாய மக்கள் கலெக்டர் ராஜேசிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் நாங்கள் 30 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மாற்று சமூகத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது சகோதரர்கள் சாதி வெறியை தூண்டி, எங்களை ஊரை விட்டு விலக்கி வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கோவில் திருவிழாவின் போது சாமி ஊர்வலம் தெருவுக்குள் வர அனுமதி மறுக்கிறார்கள்.

எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் எங்களது ரே‌ஷன் கார்டுகள், ஆதார் அட்டை ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்போம் என கூறப்பட்டுள்ளது.

சுடுகாடு ஆக்கிரமிப்பு

நெல்லிக்குப்பம் தனியார் மிட்டாய் ஆலை தொழிலாளர்கள் சங்க செயலாளர் கந்தசாமி தலைமையில் தொழிலாளர்கள் நேற்று கலெக்டர் ராஜேசிடம் கொடுத்த மனுவில், நாங்கள் பணிபுரிந்து வரும் மிட்டாய் தொழிற்சாலை நிர்வாகம் 2011–ம் ஆண்டுக்கான சம்பள உயர்வு வழங்க வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், 2015–ம் ஆண்டுக்கான சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் திருமாறன் தலைமையில் சிதம்பரம் அருகே உள்ள பூதங்குடி கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், அள்ளூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சுடுகாடு மற்றும் ஈமச்சடங்குக்காக அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தை மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரிக்குறவர்கள் மனு

பெண்ணாடம் அருகே உள்ள கருங்குழிதோப்பு பகுதியில் வசிக்கும் 40 நரிக்குறவர் குடும்பத்தினர் 35 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தங்களது பட்டாவை பெயர் மாற்றம் செய்து தரக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் ரே‌ஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 312 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் ராஜேஷ் அறிவுரை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆனந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், தனித்துணை ஆட்சியர் கோவிந்தன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதிவாணன் உள்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story