காட்டுமன்னார்கோவில் அருகே மணல் குவாரியை மூடக்கோரி 25 கிராம மக்கள் சாலை மறியல்
காட்டுமன்னார்கோவில் அருகே மணல் குவாரியை மூடக்கோரி 25 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே ஆழங்காத்தான் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் இருந்து தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் மணல் ஏற்றி செல்லப்படுகிறது.
இந்த குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதாகவும், இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி கிராம மக்கள் புகார் கூறி வந்தனர். மேலும் இந்த குவாரியை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சாலை மறியல்இந்த நிலையில் புளியங்குடி, ஆழங்காத்தான், வீரசோழபுரம் உள்ளிட்ட 25 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு மணல் குவாரிக்கு வந்தனர். அங்கிருந்து லாரிகள், டிராக்டர்களில் மணல் ஏற்றி வரும் ஆழங்காத்தான் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் 500–க்கும் மேற்பட்ட லாரிகள், டிராக்டர்கள் அணிவகுத்து நின்றன.
இதுபற்றி தகவல் அறிந்ததும் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் ஜெயந்தி, சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஷியாம்சுந்தர், குமார், வீரமணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
15 நாட்களுக்குள் நடவடிக்கைஅப்போது கிராம மக்கள் கூறுகையில், மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதை உடனடியாக நிறுத்த வேண்டும், மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் கிராம சாலைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே மணல் குவாரியை உடனடியாக மூட வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து, 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால் 15 பேர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து 15 பேரை குமராட்சி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.