முத்துகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்: ‘‘சாதி கொடுமைக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டும்’’ சேலத்தில் தா.பாண்டியன் பேட்டி


முத்துகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்: ‘‘சாதி கொடுமைக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டும்’’ சேலத்தில் தா.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 21 March 2017 5:00 AM IST (Updated: 20 March 2017 9:13 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் முத்துகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய இந்திய கம்யூனிஸ்டு

சேலம்,

மாணவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்த சேலம் மாணவர் முத்துகிருஷ்ணன் கடந்த வாரம் டெல்லியில் தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் உடல் சேலம் கொண்டு வரப்பட்டு செவ்வாய்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சேலம் அரிசிபாளையம் பகுதியில் உள்ள மாணவர் முத்துகிருஷ்ணனின் வீட்டிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

இந்தநிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நேற்று காலை சேலத்தில் உள்ள மாணவர் முத்துகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தார். பிறகு அவர் மாணவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:–

வீடு வழங்க வேண்டும்

முத்துகிருஷ்ணன் மரணம் வேதனையளிக்கிறது. இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது. அவருடைய மரணம் கண்டிக்கத்தக்கது. மாணவரின் குடும்பத்தினர் வீடு இல்லாமல் தவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாக அவர்களுக்கு ஒரு வீடு வழங்க வேண்டும். ஆதிக்க சக்திகளை துணிச்சலாக எதிர்க்கும் நிலை வர வேண்டும். சாதி கொடுமைக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டும்.

தனிப்பட்ட கட்சி, தனிப்பட்ட நபரின் வெறி காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. காக்கி சட்டைகளால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. அவர்களே ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளனர். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசிய சம்பவம், தமிழகத்திற்கே தலை குனிவாகும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்பதை ஊடகங்கள் மூலமாகவே தெரிந்து கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story