நல்லம்பள்ளி, பெரியாம்பட்டி பகுதிகளில் புதிய மதுபானக்கடைகளை அமைக்க கூடாது குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு


நல்லம்பள்ளி, பெரியாம்பட்டி பகுதிகளில் புதிய மதுபானக்கடைகளை அமைக்க கூடாது குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 21 March 2017 4:30 AM IST (Updated: 20 March 2017 9:20 PM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி, பெரியாம்பட்டி பகுதிகளில் புதிய மதுபானக்கடைகளை அமைக்க கூடாது

தர்மபுரி

மதுபானக்கடை

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

இந்த கூட்டத்தில் பெரியாம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், பெரியாம்பட்டியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றி அதே பகுதியில் கன்னிமார்சுனை என்ற இடத்தில் புதிய மதுபானக்கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மதுபானக்கடை அமைத்தால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 25 குக்கிராமங்களை சேர்ந்த, அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவ–மாணவிகள், கோவில்களுக்கு செல்லும் பொதுமக்கள், அரசு அலுவலகங்களுக்கு சென்று வருபவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த பகுதியில் புதிய மதுபானக்கடை அமைக்க கூடாது என்று கோரியிருந்தனர்.

கைமுறிவுடன் சகோதரர்கள் மனு

இதேபோல் நல்லம்பள்ளி ஒன்றியம் கெட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், கெட்டுப்பட்டியில் உள்ள கோவில் அருகே புதிய அரசு மதுபானக்கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மதுபானக்கடை அமைத்தால் பள்ளி மாணவ–மாணவிகள்,பொதுமக்கள், பெண்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் எனவே மதுபானக்கடை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

தர்மபுரி ஏலகிரியான்கொட்டாய் பகுதியை சேர்ந்த சகோதரர்களான பெரியநாயகம், செல்வம் ஆகியோர் கைகளில் ஏற்பட்ட முறிவுக்கு கட்டுபோட்ட நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வந்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், நிலத்தகராறில் எங்கள் பெற்றோர் மற்றும் எங்கள் 2 பேரை உறவினர்கள் சிலர் தாக்கினார்கள். இதில் எங்கள் 2 பேருக்கு கைமுறிவு ஏற்பட்டது. இதற்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றோம்.

விசாரணை கோரி

இந்த நிலையில் மதுபோதையில் கீழே விழுந்து எங்களுக்கு கைமுறிவு ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் பொய்யான தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான முறையான மருத்துவ பரிசோதனை எதுவும் நடத்தப்படவில்லை. நியாயமான விசாரணை கோரி கலெக்டரிடம் மனுஅளிக்க வந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் விவேகானந்தன் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


Next Story