கிருஷ்ணகிரி அருகே காயங்களுடன் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான் மீட்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு
கிருஷ்ணகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட கும்மனூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றை ஓட்டியுள்ள காட்டு பகுதி உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட கும்மனூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றை ஓட்டியுள்ள காட்டு பகுதி உள்ளது. வறட்சியால் வனப்பகுதியில் குடிநீர் இல்லாமல் வனவிலங்குகள் தண்ணீர் தேடி கிராமத்திற்கும், நீர்நிலைகளை தேடியும் செல்கின்றன. அவ்வாறு செல்லும் வனவிலங்குகள் சில நேரங்களில் நாய்கள் கடித்தும், வாகனங்களில் சிக்கி காயம் அடைந்தும் இறக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் கும்மனூர் கிராமத்திற்கு நேற்று காலை காயங்களுடன் ஒரு புள்ளிமான் வந்தது. இதை பார்த்த கிராம மக்கள் அந்த மானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கிருஷ்ணகிரி வனச்சரகர் நாகேஷ், மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று மானை மீட்டனர். பின்னர் அந்த புள்ளி மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நாரலப்பள்ளி காட்டில் விடப்பட்டது.