வீடு கட்ட இலவச நிலம் கேட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி போராட்ட கூட்டமைப்பினர் நடை பயணம்


வீடு கட்ட இலவச நிலம் கேட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி போராட்ட கூட்டமைப்பினர் நடை பயணம்
x
தினத்தந்தி 21 March 2017 4:30 AM IST (Updated: 20 March 2017 9:27 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் நிலமற்ற ஏழை மக்களுக்கு வீடு கட்ட இலவச நிலம் கேட்டு

கிருஷ்ணகிரி,

நடை பயண போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கோரிக்கைகளுக்கான போராட்ட கூட்டமைப்பு சார்பில் நிலமற்ற ஏழை மக்களுக்கு வீடு கட்டுவதற்கு இலவசமாக 3 சென்ட் நிலம் வழங்கிட கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயண போராட்டம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி சோமார்பேட்டையில் தொடங்கிய இந்த நடைபயண நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்ட செயலாளர் ஸ்டாலின்பாபு தலைமை தாங்கினார்.

டி.யு.சி.ஐ. அமைப்பின் மாவட்ட தலைவர் துரைசாமி, மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் கைலாசம், ஒன்றிய செயலாளர் மாதேஷ், மாநில அமைப்புக்குழு நிர்வாகிகள் முனிகிருஷ்ணன், பன்னீர்செல்வம், ஜஹிர், நகர செயலாளர் காதர், ஒன்றிய செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

நிலம் வழங்க வேண்டும்

நடைபயணத்தை மாநில குழு உறுப்பினர் திருமுருகன் தொடங்கி வைத்தார். மாநில குழு உறுப்பினர் கலைவாணன், மாநில பொருளாளர் ஈரோடு மோகன் ஆகியோர் பேசினார்கள். அவர்கள் பேசுகையில், மக்களுக்காகவே அரசு என்று கூறும் ஆட்சியாளர்கள் அரசுக்கு சொந்தமான நிலங்களை ஏழை மக்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள். எனவே நிலம் கேட்கும் ஏழை மக்களின் கோரிக்கை ஆட்சியாளர்களுக்கு சென்றடையவே இந்த நடைபயண போராட்டம் நடத்தப்படுகிறது என்றனர்.

இந்த நடைபயணம் பெங்களூரு ரோடு, சுங்கச்சாவடி வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தது. அங்கு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பங்கேற்ற 386 பேர் தங்களுக்கு இலவசமாக 3 சென்ட் நிலம் கேட்டு தனித்தனியாக கோரிக்கை மனுக்களை எழுதியிருந்தனர். அந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தையும் நிர்வாகிகள் பெற்று, அதை மாவட்ட கலெக்டர் கதிரவனிடம் வழங்கினார்கள்.


Next Story