கன்னியாகுமரி கல்குளம் தாலுகாவில் செயல்படும் சட்டவிரோத கல்குவாரிக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு மத்திய–மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
சட்டவிரோத கல்குவாரிக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு
மதுரை,
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம் ஆகும். இங்கு ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. ஆண்டுதோறும் மழை பெய்யும். இங்கு கல்குளம் தாலுகாவில் கருணைமாதா மலை என்ற குருசுமலை உள்ளது. இந்த மலையை சுற்றிலும் பல கிராமங்கள், கண்மாய்கள் உள்ளன.
இந்த மலையில் கல் குவாரி நடத்த ஏபியஸ்அண்டோ, அவரது உறவினர் வைத்தியநாதன் உள்பட சிலர் உரிமம் பெற்று உள்ளனர். குவாரி நடத்த வேண்டும் என்றால் அந்த இடத்தை சுற்றி 300 மீட்டர் தூரத்துக்கு கிராமங்களோ, கோவில்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களோ, நீர்நிலைகளோ இருக்கக்கூடாது என்பது விதி. ஆனால் அந்த விதிகளை பொருட்படுத்தாமல் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி ஏபியஸ்அண்டோ உரிமம் பெற்று உள்ளார். அவர்களுக்கு உடந்தையாக அரசு அதிகாரிகள் தவறான அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
தடைவிதிக்க வேண்டும்சட்டவிரோதமாக இயங்கும் அந்த கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அந்த சட்டவிரோத கல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும். தவறான அறிக்கை அளித்த அதிகாரிகள் மீதும், இதுதொடர்பாக போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு செய்த கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
நோட்டீசுஇந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனு குறித்து மத்திய புவியியல் மற்றும் சுரங்கத்துறை செயலாளர் உள்ளிட்ட மத்திய–மாநில அரசு அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.