மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்ய உத்தரவிடக்கோரி வழக்கு


மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்ய உத்தரவிடக்கோரி வழக்கு
x
தினத்தந்தி 21 March 2017 4:15 AM IST (Updated: 20 March 2017 9:40 PM IST)
t-max-icont-min-icon

மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படையினரை கைது

மதுரை,

மீனவர் சுட்டுக்கொலை

ராமநாதபுரம் ஆர்.ஆர்.சேதுபதி நகரைச் சேர்ந்த ராஜு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தமிழக மீனவர்களின் உரிமையை பறிக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் அவ்வப்போது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். இதுவரை தமிழக மீனவர்கள் 600 பேரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்று உள்ளனர். இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை கடலோர போலீசார் வழங்குவதில்லை.

இந்தநிலையில் கடந்த 6–ந்தேதி மீன்பிடிக்க சென்ற படகின் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில், பிரிட்ஜோ என்பவர் கொல்லப்பட்டார். இதுதொடாபாக தற்போது வரை சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்யவில்லை. மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசு மீது மத்திய அரசு மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது.

கைது செய்ய வேண்டும்

பிரிட்ஜோ குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு இழப்பீடு வழங்குவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு அரபிக்கடலில் 2 மீனவர்களை இத்தாலி வீரர்கள் சுட்டுக்கொன்றனர். பின்னர் இத்தாலி மாலுமிகள் 2 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. எனவே பிரிட்ஜோவை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.ஆதிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் கேட்கப்பட்டது.

பின்னர் தமிழக அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, “பிரிட்ஜோ கொலை தொடர்பாக இதுவரை 17 பேரிடம் விசாரிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து அடையாளம் தெரியாத இலங்கை கடற்படை வீரர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது“ என்று வாதாடினார்.

மேலும், “பிரிட்ஜோ சென்ற படகு, சர்வதேச கடல் எல்லையை தாண்டியதா அல்லது இந்திய எல்லைக்குள் தான் இருந்ததா என்பதை அறிய, அந்த படகில் வைக்கப்பட்டு இருந்த ஜி.பி.எஸ். (குளோபல் பொசிசனிங் சிஸ்டம்) கருவியை ஆய்வு செய்வதற்காக சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது“ என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து ஜி.பி.எஸ். கருவி ஆய்வுக்கு அனுப்பப்பட்டதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை 21–ந்தேதிக்கு(அதாவது இன்று) ஒத்திவைத்தனர்.


Next Story