விழுப்புரத்தில் கண்ணில் கருப்பு துணியை கட்டி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் போராட்டம்
விழுப்புரத்தில் கண்ணில் கருப்பு துணியை கட்டி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம்,
மாதந்தோறும் 1–ந் தேதியன்றே ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டும், பென்ஷனை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு கடந்த 16–ந் தேதி முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 4 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டபோதிலும் இவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் நேற்றும் 5–வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டத்திற்கு காஞ்சீபுரம் மண்டல தலைவர் சம்பந்தம் தலைமை தாங்கினார். விழுப்புரம் மண்டல தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் சேஷையன், வேலூர் மண்டல செயலாளர் கோவிந்தசாமி, திருவண்ணாமலை மண்டல செயலாளர் லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நூதன முறையில்....இந்த போராட்டத்தில் விழுப்புரம், கடலூர், வேலூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை ஆகிய 5 மண்டலங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள்.