கடலூரில் வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்தபோது பரிதாபம்


கடலூரில் வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 21 March 2017 5:15 AM IST (Updated: 21 March 2017 12:30 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்தபோது, வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியானார்கள்.

கடலூர்,

பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கடலூர் நகராட்சியில் கடந்த 2007-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கியது. பெரும்பாலான வார்டுகளில் இந்த பணி முடிந்ததையடுத்து, சமீபத்தில் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் பிறகு வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை குழாய் பராமரிக்கும் பணியை, தனியார் நிறுவனம் ஒன்று செய்துவருகிறது.

இந்த நிலையில் சில வார்டுகளில் பாதாளசாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது. அதனை சரிசெய்யும் பணியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விஷவாயு தாக்கியது

அந்த வகையில் கடலூர் முதுநகர் அருகே உள்ள கொடிக்கால்குப்பத்தை சேர்ந்த சேகர் மகன் வேலு(வயது 26), குப்புசாமி மகன் அப்பாகுட்டி என்கிற ஜெயக்குமார்(28), சோரியாங்குப்பம் மேட்டுத்தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் முருகன்(35) ஆகிய 3 தொழிலாளர்களும் கடலூர்-சிதம்பரம் சாலையில் மோகினி பாலம் அருகில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்வதற்காக நேற்று மாலையில் வந்தனர்.

பின்னர் அவர்கள் பாதாள சாக்கடை மூடியை (மேன்கோல்) திறந்து, குழாய்க்குள் இறங்குவதற்காக அதில் ஏணியை வைத்தனர். முதலில் வேலு, அந்த ஏணி வழியாக பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கினார்.

அப்போது விஷவாயு தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகன், வேலுவை மீட்பதற்காக குழாய்க்குள் இறங்கினார். அவரும் விஷவாயு தாக்கியதில் மயங்கி விழுந்தார். 2 பேரையும் மீட்பதற்காக உள்ளே சென்ற ஜெயக்குமாரையும் விஷவாயு தாக்கியது. இதில் அவரும் மயங்கினார்.

அடுத்தடுத்து 3 பேர் மயங்கி விழுந்ததை அந்த பகுதியில் வேறு தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கடலூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பு கவசங்களுடன் பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கினர்.

3 பேர் பலி

அப்போது விஷவாயு தாக்கியதில் வேலு, முருகன் ஆகிய 2 பேரும் பாதாள சாக்கடை குழாய்க்குள்ளேயே பலியாகி இருந்ததும், ஜெயக்குமார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக ஜெயக்குமாரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து வேலு, முருகன் ஆகியோரது உடலை தீயணைப்பு வீரர்கள் பாதாள சாக்கடை குழாய்க்குள் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.

இதற்கிடையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து வந்து வேலு, முருகன் ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றி அறிந்ததும் 3 தொழிலாளர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அங்கு வைக்கப்பட்டு இருந்த 3 தொழிலாளர்களின் உடலை பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் பலியான தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரி அவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அரசு தலைமை மருத்துவமனை முன்பு திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.

இது பற்றிய தகவல் அறிந்து வந்த சப்-கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ், தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுங்கள், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story