செங்குன்றத்தில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ரூ.30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்


செங்குன்றத்தில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ரூ.30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 21 March 2017 4:15 AM IST (Updated: 21 March 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றத்தில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. பிளாஸ்டிக் குடோன் சென்னை புரசைவாக்கம் தானா தெருவை சேர

செங்குன்றம்,

செங்குன்றத்தில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

பிளாஸ்டிக் குடோன்

சென்னை புரசைவாக்கம் தானா தெருவை சேர்ந்தவர் ஜியாந்த் வசந்த். இவர் செங்குன்றம் கிராண்ட் லைன் கட்டபொம்மன் தெருவில் ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து அதில் நாற்காலி, வாளி உள்பட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள், மெத்தைகள் ஆகியவற்றை மொத்தமாக வாங்கி வைத்து இருந்தார்.

பின்பு அந்த பொருட்களை லாரிகள் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தார்.

தீப்பிடித்து எரிந்தது

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு குடோனில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் குடோனுக்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்தபோது உள்ளே தீப்பிடித்து எரிவது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் குடோனின் உரிமையாளர் ஜியாந்த் வசந்த் மற்றும் செங்குன்றம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் குடோனில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் கட்டுக்கடங்காமல் தீ எரிந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை.

10 மணி நேரம் மேலாக...

இதனால் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மாதவரம், மணலி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகளில் வந்த 25–க்கும் மேற்பட்ட வீரர்கள் குடோனில் மளமளவென எரிந்த தீயை அணைக்க போராடினர்.

பின்னர் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மாலை 3 மணியளவில் தீயை முழுமையாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலானது.

பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்

இதற்கிடையே குடோனில் தீப்பிடித்து எரிந்தபோது அதனால் எழுந்த புகை மண்டலம் வானளவு பரவி காணப்பட்டது. அந்த பகுதி முழுவதும் புகை சூழ்ந்ததால் அருகில் வீடுகளில் இருந்த ஒரு சில பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ‘

மேலும், இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மின்கசிவு காரணமாக குடோனில் தீப்பிடித்தது தெரியவந்தது.


Next Story