சமையல் காண்டிராக்டர் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த 2–வது மனைவி பெற்றோருடன் பிடிபட்டார் போலீசார் விசாரணை
கும்மிடிப்பூண்டியில் சமையல் காண்டிராக்டர் கொலை வழக்கில் மயிலாடுதுறையில் பதுங்கி இருந்த 2–வது மனைவி மற்றும் அவரது பெற்றோர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி செயிண்ட் மேரீஸ் தெருவைச் சேர்ந்தவர் சிவா என்கிற சிவக்குமார்(வயது 33). சமையல் காண்டிராக்டர். இவரது மனைவி ரேணுகாதேவி (31). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மேலும், சிவா மயிலாடுதுறையை சேர்ந்த பிரியா(31) என்பவரை 2–வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சிவாவிற்கும், பிரியாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் கடந்த 19–ந்தேதி இரவு பிரியாவின் பூட்டப்பட்ட வீட்டுக்குள் உடலில் படுகாயங்களுடன் சிவா இறந்து கிடந்தார். அங்கு இருந்த பிரியா மற்றும் அவரது தாய் மலர் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
2–வது மனைவியை பிடித்தனர்இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு சிவாவை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். மேலும், கொலையாளியை கண்டுபிடிக்க கும்மிடிப்பூண்டி சப்–இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம் மற்றும் அலிபாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு கிராமத்தில் பதுங்கி இருந்த சிவாவின் 2–வது மனைவி பிரியா மற்றும் அவரது தந்தை செல்வம், தாய் மலர் ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் இரவு பிடித்தனர்.
கொலையாளி யார்?நேற்று காலை அவர்களை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பிரியா முக்கியமான பல தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையின் முடிவில் சிவாவை கொலை செய்தது யார்? அதற்கான காரணம் என்ன? போன்ற விவரங்கள் தெரிய வரும் என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.